நடிகை ஷில்பா ஷெட்டி வீட்டில் திருட்டு… 2 பேர் கைது செய்யப்பட்டதாகத் தகவல்!

  • IndiaGlitz, [Thursday,June 15 2023]

பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகைகளுள் ஒருவராக இருந்துவரும் நடிகை ஷில்பா ஷெட்டி மும்பையிலுள்ள ஜுஹு பகுதியில் வசித்து வருகிறார். இந்நிலையில் அவருடைய வீட்டில் திருடர்கள் இரண்டு பேர் புகுந்ததாகவும் அவர்களை போலீஸார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது.

பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்துவரும் நடிகை ஷில்பா ஷெட்டி தமிழில் நடிகர் பிரபுதேவா நடித்திருந்த ‘மிஸ்டர் ரோமியோ’ திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார். இதைத்தவிர ‘குஷி’ திரைப்படத்தில் ஒரு பாடலுக்கு மட்டும் அசத்தலான நடனம் ஆடியிருந்தார்.

மேலும் இந்தி, குஜராத்தி, பெங்காலி, ஒருசில தென்னிந்திய திரைப்படங்கள் என்று இந்தியா முழுக்கவே பிரபலமாக இருந்து வரும் நடிகை ஷில்பா ஷெட்டி தற்போது வெப் சீரிஸ் மற்றும் ரியாலிட்டி ஷோக்களில் நடுவராக பணியாற்றி வருகிறார். தற்போது 48 வயதான அவர் தனது கணவர் ராஜ்குந்தா மற்றும் 2 குழந்தைகளுடன் மும்பையின் ஜுஹு பகுதியில் வசித்து வருகிறார்.

இந்நிலையில் நடிகை ஷில்பா ஷெட்டி தனது பிறந்த நாளை கொண்டாடுவதற்காக லண்டன் சென்றிருந்தார். கடந்த ஜுன் 8 ஆம் தேதி லண்டனில் பிறந்த நாளை குடும்பத்தோடு கொண்டாடியதை அடுத்து நேற்று இத்தாலியின் டஸ்கனியில் இருந்து புகைப்படம் ஒன்றையும் வெளியிட்டு இருந்தார்.

ஆனால் தற்போது நடிகை ஷில்பா ஷெட்டிக்கு சொந்தமான மும்பை ஜுஹு வீட்டில் திருடர்கள் இரண்டு பேர் புகுந்ததாகவும் அவர்களை போலீஸார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது. மேலும் கடந்த வாரம் நடைபெற்றதாகக் கூறப்படும் இந்தச் சம்பவத்தின்போது மதிப்புமிக்க நகைகள் காணாமல் போய்விட்டதாகக் கூறப்பட்டுள்ளது.

இதனால் ஜுஹு காவல் துறையில் இதுதொடர்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டு இருப்பதாகத் தகவல் கூறப்பட்டு இருக்கிறது.