வெப்-கேமிரா மூலம் திருமணம். விடுமுறை கிடைக்காததால் நடந்த விநோதம்

  • IndiaGlitz, [Monday,December 05 2016]

திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகிறது என்று கூறுவதுண்டு. ஆனால் தற்போதைய திருமணங்கள் எப்படி எப்படியோ நிச்சயமாகிறது. கேரளாவில் நடடபெற்ற ஒரு திருமணம் வெப்-கேமிரா மூலம் நடந்ததாக வித்தியாசமான செய்தி ஒன்று வெளியாகியுள்ளது.
சவுதி அரேபியாவில் பணிபுரியும் ஹாரிஸ் என்பவருக்கும் மெக்காவில் பணிபுரியும் சாம்லா என்பவருக்கும் திருமணம் நிச்சயம் செய்யப்பட்டது. திருமணத்திற்காக மணமகள் சாம்லா குறிப்பிட்ட தினத்தில் விடுமுறையில் வந்துவிட்டார். ஆனால் ஹாரீசுக்கு விடுமுறை கிடைக்காததால் அவர் வரமுடியாத சூழ்நிலை ஏற்பட்டது.
இந்நிலையில் இருவீட்டாரும் கலந்து பேசி புதுமையான முறையில் வெப்-கேமிரா மூலம் திருமணத்தை நடத்த முடிவு செய்தனர். மணமகனுக்கு பதில் மணமகனின் சகோதரி தாலி கட்டுவார் என்றும் முடிவு செய்யப்பட்டது. கேரள மாநிலம் ஆழப்புழாவில் நடைபெற்ற இந்த திருமணத்தை மணமகன் ஹாரீஸ் வெப்கேமிரா மூலம் நேரில் பார்த்தார். வெளிநாடுகளில் வேலை செய்பவர்களுக்கு தங்களுடைய திருமணத்திற்கே விடுமுறை கிடைக்காத நிலைதான் தற்போது உள்ளது.