சென்னையில் திடீர் மழைக்கு என்ன காரணம்? தமிழ்நாடு வெதர்மேன் ரிப்போர்ட்!

  • IndiaGlitz, [Thursday,December 30 2021]

இன்று நண்பகல் முதல் சென்னையின் பல்வேறு பகுதிகளில் 100 மி.மீட்டரைத் தாண்டி கனமழை பெய்துவருகிறது. அதிலும் மெரினா கடற்கரை ஒட்டிய பகுதிகளில் கனமழை வெளுத்து வாங்கிவரும் சூழலில் இது மேக வெடிப்பாக இருக்கலாம் என்று தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்து இருக்கிறார்.

சென்னையில் மெரினா, எம்ஆர்சி நகர், ராயப்பேட்டை, மாம்பலம் பகுதிகளில் மழை கிட்டத்தட்ட மேகவெடிப்பு போன்ற நிலையில் பெய்துவருகிறது எனக் குறிப்பிட்ட தமிழ்நாடு வெதர்மேன் அதிகபட்சமாக இதுவரை 124.7 மி.மீ மழைபெய்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

மேலும் காற்றின் வேகம் நண்பகல் முதல் மணிக்கு 30.6 கி.மீட்டராக இருந்தது. இதுவரை இல்லாத அளவிற்கு நுங்கம்பாக்கத்தில் 115 மி.மீ மழையும் மாம்பலத்தில் 100 மிமீ மழையும் பெய்திருப்பதாகக் கூறப்படுகிறது.

சென்னை எம்ஆர்சி நகரில் இதுவரை 120 மி.மீ அளவை தாண்டியுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனால் அப்பகுதியில் தண்ணீர் தேங்கிக் காணப்படுகிறது.

மேலும் சென்னை மெரினா கடற்கரை ஒட்டியுள்ள பகுதிகளில் 100 மி.மீ மழையளவை தாண்டியிருக்கிறது.

வடபழனி உள்ளிட்ட மெட்ரோ பகுதிகள், எழும்பூர், கிண்டி, சேத்துப்பட்டு, சென்ட்ரல், புரசைவாக்கம் ஆகிய பகுதிகளில் தண்ணீர் தேங்க ஆரம்பித்துள்ளன.

கனமழை காரணமாக தலைமைச் செயலகத்திற்குள் தண்ணீர் புகுந்துள்ளது. இதனால் ஊழியர்கள், அதிகாரிகள் அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டு உள்ளனர்.

மேகவெடிப்பு

சென்னையில் தற்போது பெய்துவரும் மழைக்கு மேகவெடிப்பு காரணமாக இருக்கலாம் என்று தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார். அதாவது கனமான மழைநீரை கொண்ட மேகங்கள் ஒரே நொடியில் மொத்தமாக தண்ணீராக மாறும்நிலை. இதுபோன்ற நேரத்தில் மழை மேகத்தைச் சுற்றியுள்ள 20-30 சதுர கி.மீ பரப்பளவிற்கு எதிர்பாராத விதமாக 100 மி.மீ பொழியும் என்றும் கூறப்படுகிறது.

கனமான மழை நீர் கொண்ட மேகம் நமக்கு மேலே இருக்கிறது என்று வைத்துக்கொள்வோம். இதைச் சுற்றி குளிர்காற்று இருக்கும்போது பூமியில் இருந்து மேலே செல்லும் வெப்பக்காற்று இந்த குளிர் காற்றோடு உரசும். இந்த வெப்ப காற்றும் குளிர் காற்றும் இணைவதால் திடீரென Condesation ஆகும். இதனால் வாயுப்பொருள் திடீர் திரவ பொருளாக மாறிவிடும்.

இப்படி குளிர் காற்றும் சூடான காற்றும் இணைத்து திடீரென மேகத்தை திரவமாக மாற்றிய ஒரு சூழலில்தான் சென்னையில் தற்போது கனமழை பெய்துவருவதாக நம்பப்படுகிறது.