யூடியூப் விமர்சகர்களுக்கு மணி கட்டப்படுகிறதா? ரூ.2 கோடி கேட்டு நோட்டீஸ் அனுப்பிய தயாரிப்பாளர்..
- IndiaGlitz, [Tuesday,June 18 2024]
கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு திரைப்படம் வெளியானால் இரண்டு அல்லது மூன்று நாட்கள் கழித்து தான் முன்னணி பத்திரிகைகள் மற்றும் வார இதழ்களில் திரை விமர்சனம் வரும் என்பதும் அந்த விமர்சனமும், விமர்சன குழு அமைத்து ஒரு நேர்மையான விமர்சனமாக இருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.
முன்னணி பத்திரிகைகள் மற்றும் வார இதழ்களில் விமர்சனம் வந்த பிறகு தான் பலர் சினிமா பார்க்க செல்வார்கள் என்பதும் அந்த அளவுக்கு விமர்சனத்தில் ஒரு நேர்மை இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
ஆனால் தற்போது யூடியூபில் விமர்சனங்கள் அதிகரித்து வரும் நிலையில் ஒரு போன் இருக்கிறவர்கள் கூட விமர்சனம் செய்து வருகின்றனர் என்பதும் அதுமட்டுமின்றி ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களிலும் படம் முதல் காட்சி ஓடிக் கொண்டிருக்கும்போதே பாசிட்டிவ் மற்றும் நெகட்டிவ் விமர்சனங்கள் வந்து ஒரு திரைப்படத்தின் வசூலுக்கு மிகப்பெரிய தாக்கமாக இருந்து வருகிறது.
இந்த நிலையில் யூடியூப் விமர்சகர்களுக்கு மணி கட்ட வேண்டும் என்று ஏற்கனவே பல தயாரிப்பாளர்கள் கூறியுள்ள நிலையில் தற்போது ’வெப்பன்’ படத்தின் தயாரிப்பாளர் யூடியூபில் விமர்சனம் ஒருவருக்கு ரூபாய் 2 கோடி நஷ்ட ஈடு கேட்டு நோட்டீஸ் அனுப்பி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளன.
’வெப்பன்’ படத்திற்கு யூடியூப் விமர்சகர் ஒருவர் நெகட்டிவ் விமர்சனம் தந்ததாகவும் அதில் நடித்த நடிகர் வசந்த் ரவி உட்பட படக்குழுவினரை அவதூறு பரப்பும் வகையில் பேசியதாகவும் இதனை அடுத்து ரூபாய் 2 கோடி நஷ்ட ஈடு கேட்டு நோட்டீஸ் அனுப்பி இருப்பதாகவும் கூறப்படுகிறது.
பல யூடியூப் விமர்சனங்கள் ஒருதலைப் பட்சமாக இருப்பதாக கூறப்படும் நிலையில் இந்த நோட்டீஸ் பூனைக்கு மணி கட்டுவது போல் யூடியூப் விமர்சகர்களுக்கு மணி கட்டப்படுமா என்பதை பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும்.