இன்று மாலை முதல் ஜல்லிக்கட்டு அவசர சட்டம். ஜனாதிபதியை சந்தித்த பின் தம்பித்துரை பேட்டி
- IndiaGlitz, [Saturday,January 21 2017]
மாணவர்கள் மற்றும் இளைஞர்களின் எழுச்சி காரணமாக ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு தமிழக அரசு சார்பில் தயாரிக்கப்பட்ட அவசர சட்டத்திற்கு மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஒப்புதல் அளித்தார். இந்த அவசர சட்ட வரைவு மத்திய சட்ட அமைச்சகத்தின் ஒப்புதல் பெற்று ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் ஒப்புதலுக்காக நேற்றே அனுப்பி வைக்கப்பட்டது.
இந்நிலையில் இன்று தம்பித்துரை தலைமையில் அதிமுக எம்.பி க்கள், ராஷ்ட்ரபதி பவனுக்குச் சென்று பிரணாப் முகர்ஜியை சந்தித்து பேசினர். இந்த சந்திப்பில் ஜனாதிபதியிடம் ஜல்லிக்கட்டு நடத்த அவசர சட்டத்திற்கு ஒப்புதல் அளிக்க அவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
பின்னர் ஜனாதிபதி மாளிகையில் இருந்து வெளியே வந்தவுடன் அதிமுக எம்பியும், துணை சபாநாயகருமான தம்பித்துரை செய்தியாளர்களிடம் பேசியபோது, 'இன்று மாலை முதல் ஜல்லிக்கட்டு அவசர சட்டம் பிறப்பிக்கப்பட்டு நடைமுறைக்கும் வரும் என்று நாங்கள் உறுதியாக நம்புகிறோம்' என்று கூறியுள்ளார்.
இன்று மாலை தமிழக பொறுப்பு ஆளுனர் சென்னை வரவுள்ளதாகவும், அவர் இன்று மாலையில் அவசர சட்டம் குறித்த அறிவிப்பை முறைப்படி வெளியிடுவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.