வாங்கிய கடனுக்கு வட்டி மட்டும் 50 கோடி ரூபாய் கட்டிய சூப்பர்ஸ்டார் நடிகர்!

50 கோடி ரூபாய் வட்டி மட்டும் கட்டி உள்ளதாக சூப்பர் ஸ்டார் நடிகர் தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவி, அவருடைய மகன் ராம் சரண் தேஜா, பூஜா ஹெக்டே நடிப்பில் கொரட்டாலா சிவா இயக்கத்தில் உருவாகிய திரைப்படம் ’ஆச்சார்யா’. இந்த படம் நாளை உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

இந்த நிலையில் ஹைதராபாத்தில் சமீபத்தில் பத்திரிகையாளர்களை சந்தித்த சிரஞ்சீவி, ‘கொரோனா ஊரடங்கு காரணமாக அனைத்து தொழில்களும் பாதிக்கப்பட்டது போல் சினிமாவும் பாதித்துள்ளது, இந்த படம் ஊரடங்கால் ஏற்பட்ட தாமதம் காரணமாக பட்ஜெட் அதிகமானது. நாங்கள் வட்டி மட்டுமே 50 கோடி ரூபாய் கட்டி இருக்கிறோம் என்று கூறினால் உங்களால் கற்பனை செய்து பார்க்க முடியுமா? அந்த 50 கோடியில் ஒரு படத்தையே எடுத்து முடித்து விடலாம்.

ரசிகர்களுக்கு நல்ல விஷூவல் அனுபவம் தர வேண்டும் என்பதற்காக நாங்கள் அதிகமாக செலவு செய்கிறோம். அவ்வாறு நாங்கள் செலவு செய்யும்போது அரசாங்கத்திடமிருந்து எங்களுக்கு சில எதிர்பார்ப்புகள் இருப்பதில் தவறில்லை. எங்களது படங்களுக்கு கூடுதலாக கட்டணம் வசூலிக்க அரசாங்கம் எங்களுக்கு அனுமதி அளிக்க வேண்டும். நாங்கள் மற்றவர்களை விட அதிகமாக வரி செலுத்துகிறோம். எனவே எங்களுக்கு இதை கேட்பதற்கு உரிமை இருக்கிறது என்று சிரஞ்சீவி கூறியுள்ளார். அவரது இந்த பேச்சு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.