சுதந்திர இந்தியாவுக்காக முதல் தங்கப் பதக்கத்தைப் பெற்றுதந்த சாதனை நாயகன் உயிரிழப்பு!
- IndiaGlitz, [Saturday,June 19 2021]
இந்தியா சுதந்திரம் பெற்றப்பிறகு தடகளப் போட்டியில் வெற்றிப்பெற்று இந்தியாவிற்காக முதல் தங்கப் பதக்கத்தைப் பெற்றுதந்தவர் மில்கா சிங். இவர் கொரோனா பாதிப்பு காரணமாக தனது 91 ஆவது வயதில் நேற்று காலமானார்.
மில்கா சிங்கின் உயிரிழப்பை தொடர்ந்து இந்திய பிரதமர் உட்பட விளையாட்டு வீரர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். கடந்த 1958 ஆம் ஆண்டு நடைபெற்ற காமன்வெல்த் போட்டியில் கலந்து கொண்ட மில்கா சிங் 400 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் கலந்து கொண்டு இந்தியாவிற்காக முதல் தங்கப் பதக்கத்தை பெற்றுத் தந்தார். அதோடு இவருடைய சொந்த வாழ்க்கையும் தற்போது ஊடகங்கள் மத்தியில் படு வைரலாகி வருகிறது.
மில்கா சிங் கடந்த 1935 ஆம் ஆண்டு அக்டோபர் 8 ஆம் தேதி பாகிஸ்தானில் பிறந்தவர். கடந்த 1947 இல் இந்தியா சுதந்திரம் பெற்றப்பிறகு பாகிஸ்தானில் நடைபெற்ற கலவரத்தில் சிக்கி இவருடைய பெற்றோர்கள் உயிரிழந்து விட்டதாகக் கூறப்படுகிறது. இதனால் அகதியாக மாறிய மில்கா டெல்லிக்கு இடம் பெயர்ந்துள்ளார். அங்குள்ள டி கடைகளில் வேலை செய்து உயிர் வாழ்ந்துவந்த மில்கா சிங் இளைஞனான பிறகு இராவணுத்தில் சேர்ந்து பணிபுரிந்து வந்துள்ளார். கூடவே இவருக்கு ஓட்டப் பந்தயத்தில் அதிக ஆர்வம் இருந்துள்ளது.
இதையடுத்து இராவணு வீரராக இருந்துகொண்டே கடந்த 1958 ஆம் ஆண்டு இந்தியாவிற்காக முதல் தங்கப் பதக்கத்தை பெற்றுத் தந்துள்ளார். பின்பு 1959 ஆம் ஆண்டு டோக்கியோவில் நடைபெற்ற 200 மீ, 400 மீ ஓட்டப்பந்தயங்களில் வெற்றிப் பெற்று தங்கம் வென்றுள்ளார். இவருடைய திறமையைப் பாராட்டி மத்திய அரசு கடந்த 1959 ஆம் ஆண்டு பத்ம ஸ்ரீ பட்டம் வழங்கி இருக்கிறது.
அடுத்து 1960 ஆம் ஆண்டு பாகிஸ்தானில் நடைபெற்ற போட்டியில் மின்னல் வேகத்தில் ஓடி “பறக்கும் சீக்கியர்” என்ற பட்டத்தையும் பெற்றார். இந்த சாதனை நாயகனின் வெற்றிக் கதை கடந்த 2013 ஆம் ஆண்டு சினிமாவாக எடுக்கப்பட்டு உள்ளது. “பாக் மில்கா பாக்” எனப் பெயரிடப்பட்ட இந்தத் திரைப்படத்தில் பாலிவுட் நடிகர் பர்ஹான் அக்தர் நடித்து இருந்ததும் குறிப்பிடத்தக்கது. இந்தத் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.
இப்படி பல வெற்றிச் சாதனைகளைப் படைத்த மில்கா ஒலிம்பிக் போட்டிகளில் இந்தியா தங்கப்பதக்கம் பெறுவதை பார்க்க வேண்டும் என ஆவலாக இருந்தார். ஒருவேளை 2020 டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று இருந்தால் அவருடைய கனவு நிறைவேறி இருக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது.