நல்ல படம் எடுத்தால் திருட்டு விசிடியால் பாதிப்பு வராது. கே.பாக்யராஜ்

  • IndiaGlitz, [Wednesday,April 12 2017]

கோலிவுட் திரையுலகமே திருட்டு விசிடியால் பெரும் பாதிப்பு ஏற்படுவதாக கூறி வருகின்றனர். திருட்டு விசிடியை ஒழிக்க கடும் நடவடிக்கையை எடுக்க போவதாக தயாரிப்பாளர் சங்கத்தின் புதிய தலைவர் விஷாலும் தெரிவித்துள்ளார். இந்த நிலையில் இந்திய சினிமாவின் சிறந்த திரைக்கதையாசிரியர்களில் ஒருவரான கே.பாக்யராஜ் திரைப்பட விழா ஒன்றில் 'திருட்டு விசிடியால் சினிமாவுக்கு 10 சதவீதம் தான் பாதிப்பு என்றும், நல்ல கதையம்சம் உள்ள படங்கள் எடுத்தால் நிச்சயமாக மக்கள் தியேட்டருக்கு வந்து படம் பார்ப்பார்கள்' என்றும் கூறியுள்ளார்.

புதுமுகங்கள் நடித்துள்ள 'ரோஜா மாளிகை' என்னும் படத்தின் ஆடியோ வெளியீட்டு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கே.பாக்யராஜ் கூறியதாவது: சமீபத்தில் வெளியான 'மாநகரம்', '8 தோட்டாக்கள்' போன்ற நல்ல கதை அம்சம் உள்ள படங்கள், பெரிய நடிகர்கள் இல்லை என்றாலும் பேசப்படுகிறது. காரணம் நல்ல கதை மற்றும் தயாரிப்பு முறை என்பதால் தான். பாகிஸ்தான்காரன் எப்போதாவதுதான் குண்டுபோடுவான். அதனால் ஏற்படும் பாதிப்பு மிகக்குறைவுதான். ஆனால் லோக்கல் அரசியல்வாதிகளால்தான் அதிக பாதிப்பு ஏற்படுகிறது. அதுபோல் திருட்டு விசிடி பாதிப்பை விட அதிக பாதிப்பு மற்ற விஷயங்களில்தான் இருக்கின்றது.

மேலும் தியேட்டர் உரிமையாளர்கள் பெரிய ஹீரோக்களின் படங்களுக்கு மட்டும் முக்கியத்துவம் தராமல், சிறிய பட்ஜெட் படங்களுக்கும் முன்னுரிமை தரவேண்டும். புதிய நடிகர்களின் படங்களுக்கு மாலைக்காட்சியை தியேட்டர்கள் கொடுக்க வேண்டும். பெரிய நடிகர்கள் படம் என்றால் காலையில் கூட கூட்டம் வரும், ஆனால் புதிய நடிகர் படங்களை காலை காட்சியில் வெளியிட்டால் கூட்டம் வராது. அதனால் அதற்கேற்றபடி தியேட்டர் உரிமையாளர்கள் நடவடிக்கை எடுக்கவேண்டும்' என்று கூறினார்.