கமல் டிரம்ப்பை சந்தித்தாலும் எங்களுக்கு கவலையில்லை: அமைச்சர் ஜெயகுமார்
- IndiaGlitz, [Thursday,June 21 2018]
உலகநாயகன் கமல்ஹாசன் நேற்று டெல்லியில் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியை சந்தித்து தமிழக அரசியல் நிலவரம் குறித்து பேசினார். இந்த சந்திப்பு தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இன்று ராகுல்காந்தியின் தாயாரும் முன்னாள் காங்கிரஸ் தலைவருமான சோனியா காந்தியை சந்தித்து பேசியுள்ளார். காங்கிரஸ் பிரமுகர்களே ராகுல், சோனியாவை அரிதாகவே சந்தித்து வரும் நிலையில் அடுத்தடுத்து ராகுல், சோனியாவை கமல் சந்தித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில் கமல்-சோனியா சந்திப்பு குறித்து கருத்து கூறிய அமைச்சர் ஜெயகுமார், 'கமல் யாரை வேண்டுமானாலும் சந்திக்கலாம். அது அவருடைய உரிமை. கமல் அமெரிக்க அதிபர் டிரம்ப்பை சந்தித்தாலும், வடகொரிய அதிபர் கிம் ஜாங்கை சந்தித்தாலும் எங்களுக்கு கவலையில்லை. எங்களை பொருத்தவரையில் மக்கள் ஆதரவு முழுமையாக உள்ளது என்று கூறினார்
அதேபோல் இந்த சந்திப்பு குறித்து கருத்து கூறிய திமுக பிரமுகர் துரைமுருகன், 'கமல் புதிய கட்சியை ஆரம்பித்துள்ளார். தன்னுடைய கட்சியின் விளம்பரத்திற்காக அவர் இதுபோன்ற சந்திப்பை நடத்தி வருகின்றார். இந்த ஒரு சந்திப்பை வைத்து இருவரும் கூட்டு சேர்வார்கள் என்பதை முடிவு செய்ய முடியாது' என்று கூறினார்.