நாங்கள் விஜய் அஜித் இல்லை.. ட்ரோன் விபத்திற்கு பின் அறிவுரை கூறிய பிரபல பாடகர்..!

  • IndiaGlitz, [Saturday,March 04 2023]

பிரபல பாடகர் ஒருவர் கல்லூரி நிகழ்ச்சி ஒன்றில் பாடி கொண்டிருந்தபோது திடீரென ட்ரோன் கேமிரா அவரது தலை மீது மோதியதால் அவர் காயமடைந்து சிகிச்சை பெற்றார். இந்த நிலையில் அவர் நிகழ்ச்சி ஏற்பாடு செய்பவர்களுக்கு சில அறிவுரைகளை கூறியுள்ள வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

தமிழ் திரை உலகின் முன்னணி பாடகர்களில் ஒருவர் பென்னி தயாள் என்பதும் அவரது பாடல்கள் பல சூப்பர் ஹிட் ஆகியுள்ளன என்பது தெரிந்ததே. மேலும் அவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் நடுவராகவும் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சமீபத்தில் பாடகர் பென்னி தயாள் கல்லூரி ஒன்றில் நடந்த இசை நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பாடிக்கொண்டிருந்தார். ஒன்று மிகவும் அவரது அருகில் வந்த ட்ரோன் கேமிரா திடீரென பின்புறத்தில் மோதியது. இதன் காரணமாக பென்னி தயாள் மேடையிலேயே சரிந்து விழுந்தார். அவர் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவரது உடல்நிலை தற்போது நலமாக இருப்பதாகவும் தெரியவந்துள்ளது.

இந்த நிலையில் பென்னி தயாள் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் தான் தற்போது நலமாக இருப்பதாகவும் தனது தலையின் பின் பகுதியில் ட்ரோன் மோதியதால் பின்பகுதியிலும், இரண்டு விரல்களிலும் காயம் ஏற்பட்டதாகவும் அவர் தெரிவித்தார். இதனை அடுத்து அவர் மூன்று விஷயங்களை அறிவுரையாக கூறியுள்ளார்.

முதலாவதாக இது போன்ற மேடை நிகழ்ச்சியை நடத்த ஏற்பாடு செய்பவர்கள் ட்ரோனை மேடை அருகே வருவதை தவிர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ஒரு குறிப்பிட்ட தூரத்திலிருந்து ட்ரோன் கேமரா இயங்கினால் போதுமானது என்று தெரிவித்துள்ளார். இரண்டாவது கல்லூரிகள், தனியார் நிறுவனங்கள் இசை நிகழ்ச்சி நடத்தும்போது ட்ரோன் கேமராவை பயன்படுத்த முடிவு செய்தால் தயவு செய்து அங்கீகாரம் பெற்ற ட்ரோன் நிறுவனத்தை மட்டுமே பங்கேற்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அங்கீகாரம் பெற்றவர்களால் மட்டுமே ட்ரோன் கேமராவை சரியாக கையாள முடியும்.

மூன்றாவதாக நாங்கள் அஜித், விஜய்,, சல்மான் கான் ஷாருக்கான், பிரபாஸ் போன்ற பிரபலங்கள் இல்லை. நாங்கள் ஒரு சாதாரண பாடகர்கள் தான், எனவே எங்களது மிக அருகில் ட்ரோன் கேமராவை கொண்டு வர வேண்டிய அவசியம் இல்லை என்றும் தெரிவித்தார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.