மேடமி டுஸாட்ஸ் அருங்காட்சியகத்தில் பிரபல பாடகியின் மெழுகு சிலை
- IndiaGlitz, [Thursday,March 16 2017]
இங்கிலாந்து தலைநகர் லண்டனில் உள்ள மேடமி டுஸாட்ஸ்' என்ற அருங்காட்சியகத்தில் உலகப்புகழ் பெற்றவர்களின் மெழுகு உருவச்சிலை நிறுவப்பட்டிருப்பது அனைவரும் அறிந்ததே. இந்திய பிரதமர் மோடி , அமிதாப்பச்சன் உள்பட பலருடைய மெழுகுசிலை இங்கு உள்ளது. லண்டன் மட்டுமின்றி உலகின் முன்னணி நகரங்களிலும் இதன் கிளைகள் உள்ளன.
இந்நிலையில் விரைவில் இந்திய தலைநகர் டெல்லியில் மேடமி டுஸாட்ஸ்' கிளை நிறுவப்படவுள்ளது. இந்த அருங்காட்சியகத்தில் இந்தியாவின் பிரபலங்கள் மெழுகுசில்லை காட்சிக்காக வைக்கப்படும்.
இந்த நிலையில் பிரபல பின்னணி பாடகி ஷ்ரேயா கோஷல் அவர்களின் மெழுகுசிலை வைக்க ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. இந்த அருங்காட்சியகத்தில் இடம்பெறும் சிலைகளில் முதல் இந்திய பாடகி ஷ்ரேயாதான் என்பது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து ஷ்ரேயா கூறியபோது, 'உலக தலைவர்கள், கலைஞர்கள், வரலாற்று அறிஞர்களின் சிலை அமைக்கப்படும் அருங்காட்சியகத்தில் எனது சிலையும் இடம்பெறுவது மிகுந்த மகிழ்ச்சியையும் உற்சாகத்தையும் அளித்துள்ளது என்று கூறியுள்ளார்.
கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக பாடகியாக இருந்து வரும் ஷ்ரேயா கோஷல், தமிழ், இந்தி, பெங்காளி, கன்னடம், மலையாளம், மராத்தி, பஞ்சாபி போன்ற பல மொழிகளில் ஏராளமான திரைப்பட பாடல்களை பாடியவர். மேலும் ஷ்ரேயா நான்கு தேசிய விருதுகளையும், பத்து ஃபிலிம்பேர் விருதுகளையும் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.