செம்பரப்பாக்கம் ஏரியில் இருந்து திறந்துவிடும் நீரின் அளவு அதிகரிப்பு! இப்போது எவ்வளவு தெரியுமா?
- IndiaGlitz, [Wednesday,November 25 2020]
வடகிழக்கு பருவமழை காரணமாக ஏற்கனவே செம்பரபாக்கம் ஏரி முழு கொள்ளளவை நெருங்கி இருந்த நிலையில் தற்போது நிவர் புயல் காரணமாக பெய்து வரும் கனமழையால் இன்று காலை கிட்டத்தட்ட முழுகொள்ளளவை நெருங்கி விட்டது.
இந்த ஏரியின் மொத்த கொள்ளளவு 24 அடி என்ற நிலையில் இன்று காலை 22 அடியை எட்டி விட்டதால் நண்பகல் 12:00 மணிக்கு வினாடிக்கு ஆயிரம் கனஅடி நீர் திறக்கப்பட்டது. இந்த நிலையில் கன மழை தொடர்ந்து பெய்து வரும் செம்பரம்பாக்கம் ஏரிக்கு வரும் நீரின் அளவு அதிகரித்துக் கொண்டே வருவதால் படிப்படியாக ஏரியில் இருந்து வெளியேறும் தண்ணீரின் அளவும் அதிகரிக்கும் என்று ஏற்கனவே பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.
அந்த வகையில் சற்று முன் வெளியான தகவலின்படி செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து வெளியேறும் நீரின் அளவு தற்போது 3 ஆயிரம் கன அடியாக ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. முதற்கட்டமாக ஆயிரம் கன அடி நீர் திறந்து விடப்பட்டபோதே அடையாறு ஆறு உள்ளிட்ட பகுதிகளில் வெள்ளநீர் பெருக்கெடுத்து ஓடிய நிலையில் தற்போது வெளியேறும் நீரின் அளவு படிப்படியாக உயர்த்தப்பட்டு வினாடிக்கு 3000 கனஅடியாக அதிகரித்துள்ளதால் அடையாறு ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் தாழ்வான பகுதியில் உள்ள பொதுமக்கள் உடனடியாக பாதுகாப்பான இடத்திற்குச் செல்லும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.