18% ஜிஎஸ்டி வரியை எதிர்த்து குடிநீர் கேன் உற்பத்தியாளர்கள் வேலைநிறுத்தம்
- IndiaGlitz, [Sunday,May 28 2017]
சென்னை உள்பட பெரும்பாலான நகரங்களில் பொதுமக்கள் குடிநீர் கேன்களையே குடிநீருக்காக பயன்படுத்தி வருகின்றனர். கேன்வாட்டர் உற்பத்தி ஒருசில நாட்கள் நிறுத்தப்பட்டால் பொதுமக்கள் பெரும் இன்னல்களுக்கும் ஆளாகும் நிலை உள்ளது.
இந்த நிலையில் மத்திய அரசு திடீரென குடிநீர் கேன்களுக்கு 18% ஜிஎஸ்டியை விதித்துள்ளது. இந்த வரிவிதிப்பை உடனடியாக திரும்பப் பெறக் கோரி தனியார் குடிநீர் உற்பத்தியாளர்கள் காலவரம்பற்ற வேலைநிறுத்தம் செய்ய முடிவு செய்துள்ளனர். இதனால் சென்னையில் குடிநீர் கேன்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பு இருப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளது.
இதுகுறித்து தனியார் குடிநீர் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் நிர்வாகிகள் கூறியபோது, 'குடிநீர் கேன்களுக்கு 18% ஜிஎஸ்டி வரி விதிக்கப்பட்டது கண்டிக்கத்தக்கது. குடிநீர்கேன்களுக்கான 18% ஜிஎஸ்டியை உடனடியாக திரும்பப்பெறக் கோரி தனியார் குடிநீர் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் சார்பில் இன்று மாலை முதல் காலவரம்பற்ற வேலைநிறுத்தம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது' என்று கூறினர். சென்னை மட்டுமின்றி திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்ட தனியார் குடிநீர் உற்பத்தியாளர்கள் சங்கங்களும் இந்த வேலை நிறுத்தத்தில் கலந்து கொள்கிறது.