ஒரு சாப்பாடு ரூ.7,500? ஒட்டுமொத்தமாக சுரண்டப்படும் ஆப்கன் அப்பாவிகள்!

  • IndiaGlitz, [Saturday,August 28 2021]

காபூல் விமான நிலையத்தில் இரட்டைக் குண்டுவெடிப்பு சம்பவம் நடைபெற்ற பிறகும் அங்கு வரும் மக்களின் எண்ணிக்கை குறைந்தபாடில்லை. ஆபானிஸ்தானைவிட்டு எப்படியாவது தப்பித்துவிடவேண்டும் என நினைக்கும் அப்பாவி மக்கள் தொடர்ந்து காபூல் விமான நிலையத்தில் குவிந்து வருகின்றனர்.

இதனால் காபூல் நகரத்தில் விற்கப்படும் அத்யாவசியப் பொருட்களின் விலை பன்மடங்காக உயர்ந்துவிட்டது எனக் கூறப்படுகிறது. மேலும்  தாலிபான்களுக்கு அஞ்சி நாட்டைவிட்டே ஓட நினைக்கும் அந்த மக்களிடம் ஒரு பாட்டில் தண்ணீரானது 40 அமெரிக்க டாலருக்கு விற்கப்படுகிறது. இதன் இந்திய மதிப்பு ரூ.3,000 என்பதும் குறிப்பிடத்தக்கது.

அதேபோல ஒரு உணவுப்பொட்டலம் 100 அமெரிக்க டாலருக்கு விற்பனை செய்யப்படுகிறதாம். இதன் இந்திய விலை ரூ.7,500 என்பதும் கடும் வியப்பை ஏற்படுத்துகிறது. இதுகுறித்துப் பேசும் ஆப்கன் மக்கள் தாலிபான்களை நினைத்துத்தான் தப்பியோட நினைக்கிறோம். இதற்காக நாள் கணக்கில் விமான நிலையத்தில் காத்துக்கிடக்கிறோம். ஆனால் உயிர்வாழ்வதற்கு கூட இவ்வளவு காசு வாங்குகிறார்களே? இது என்ன மனிதாபிமானம்? என்றும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

காபூல் சர்வதேச விமானநிலையத்தில் இருந்து ஜெர்மனி, அமெரிக்கா, இந்தியா போன்ற நாடுகள் தங்களுடைய குடிமக்களை மீட்டுவருகின்றனர். அதுவும் இத்தகைய மீட்புப்பணிகளுக்கு வரும் 31 ஆம் தேதிவரை தாலிபான்கள் காலஅவகாசம் கொடுக்கப்பட்டு உள்ளது.

இந்நிலையில் நேற்றுமுன்தினம் ஐ.எஸ் தீவிரவாத அமைப்பின் கோராசன் எனும் பிரிவு இரட்டை குண்டுவெடிப்பு தாக்குதலில் ஈடுபட்டது. இதனால் 13 அமெரிக்க கடற்படையினர் மற்றும் நூற்றுக்கும் மேற்பட்ட அப்பாவி மக்கள் கொல்லப்பட்டனர். இந்தச் சம்பவத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்த அமெரிக்கா தற்போது ட்ரோன் விமானங்களை வைத்துக்கொண்டு ஐ.எஸ் தீவிரவாத அமைப்பின்மீது தாக்குதலை தொடுத்து வருவதாகத் தகவல் வெளியாகி உள்ளது.