Watchman Review
வாட்ச்மேன்: வலுவில்லாத காவலாளி
ஜிவி பிரகாஷ் நடிப்பில் இயக்குனர் விஜய் இயக்கத்தில் இன்று வெளியாகியுள்ள 'வாட்ச்மேன்' படத்தின் புரமோஷன் சூப்பராக இருந்த நிலையில் புரமோஷனுக்கு ஏற்ற வகையில் படம் உள்ளதா? என்பதை இப்போது பார்ப்போம்
இந்தியாவின் மோஸ்ட் வாண்டட் தீவிரவாதிகள் ஐந்து பேர் சிறையில் இருந்து தப்பித்து முன்னாள் டிஜிபி ஒருவரை கொலை செய்ய அவரது பங்களாவிற்குள் புகுந்து விடுகின்றனர். அந்த பங்களாவிற்குள் சூழ்நிலை காரணமாக திருடுவதற்காக நுழைந்த ஜிவி பிரகாஷும், அந்த பங்களாவை காவல் காக்கும் நாயும், ஆபத்தில் உள்ள டிஜிபியை எப்படி காப்பாற்றுகின்றனர் என்பதுதான் படத்தின் கதை
ஜிவி பிரகாஷ் காதலன், கடன்காரன், திருடன், ஒரு டிஜிபியையே காப்பாற்றும் சாதாரண வாட்ச்மேன், தீவிரவாதிகளிடம் சண்டை போடும் சாமான்யன் என அவரது நடிப்பு முந்தைய படங்களோடு ஒப்பிடும்போது ஓகே லெவலில் உள்ளது. பயம், திகில், உணர்ச்சிகளை முகத்தில் வெளிப்படுத்த ஒரு வாய்ப்பு இந்த படத்தில் கிடைத்துள்ளது.
சம்யுக்தா ஹெக்டே இந்த படத்தின் நாயகி என்ற பெருமை மட்டும் உண்டு. அவர் தோன்றும் ஓரிரு காட்சிகள் ஓகே என்றாலும் இந்த படத்தின் கதைக்கும் அவருக்கும் சுத்தமாக சம்பந்தம் இல்லாததால் அவரது கேரக்டர் ஒட்டவே இல்லை
யோகிபாபு பெயரை டைட்டிலில் மட்டும் இயக்குனர் பயன்படுத்தியுள்ளார். காமெடி சுத்தமாக எடுபடவில்லை
முன்னாள் டிஜிபியாக நடித்திருக்கும் சுமன் வரும் காட்சிகள் குறைவு என்றாலும் நிறைவான நடிப்பு. மற்றபடி தீவிரவாதிகளாக வரும் ஐந்து பேர்களில் மூவரின் முகங்கள் இருட்டில் சுத்தமாக தெரியவே இல்லை. முகம் தெரிவதற்கு முன்னரே இறந்துவிடுவதால் அவர்கள் யாரென்றே தெரியவில்லை.
படத்தின் 75% இருட்டாகவே உள்ளது. நாலே நாலு சுவற்றில் தான் கிட்டத்தட்ட பாதி படத்திற்கும் மேல் உள்ளது. அந்த இருட்டு காட்சிகளை ஓரளவுக்கு தெரியும் வகையில் ஒளிப்பதிவாளர் நீரவ்ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்த படத்தின் ரன்னிங் டைம் ரொம்ப குறைவாக இருப்பதால் இதில் தேவையில்லாத காட்சிகள் சிலவற்றை எடிட்டர் அந்தோணி வெட்டியிருந்தால் அது குறும்படமாக மாறியிருக்கும் அபாயம் இருந்ததால் வெட்டாமல் விட்டுவிட்டார் போல் தெரிகிறது.
இந்த படத்தில் பாடல்கள் இல்லை என்பது ஒரு ஆறுதல். இருப்பினும் ஜிவி பிரகாஷ் பின்னணி இசையில் பின்னி எடுத்துள்ளார். படம் ஓரளவுக்கு விறுவிறுப்பாக இருக்கின்றது என்றால் அது பின்னணி இசையால் மட்டுமே
இயக்குனர் விஜய், நான்-லீனர் முறையில் கதை சொல்ல முயற்சித்துள்ளார். இப்போது உள்ள இயக்குனர்கள் சிலர் சூப்பராக இந்த நான்-லீனர் முறையை கையாண்டுள்ளனர். ஆனால் இந்த படம் நான்-லீனர் முறையில் ஒரு படம் எப்படி எடுக்கக்கூடாது என்பதற்கு உதாரணமாக உள்ளது. ஒரே நேர்கோட்டில் இந்த கதையை கூறியிருந்தால்கூட இதைவிட சிறப்பாக இருந்திருக்கும்.
ஒரே இரவில் நடக்கும் இந்த கதையில் ஒரு முழத்திற்கும் மேல் காதில் பூ சுற்றியுள்ளார் இயக்குனர் விஜய். முதல் பாதி பார்வையாளர்களின் பொறுமையை சோதித்தது என்றால் இரண்டாம் பாதியில் ஏகப்பட்ட லாஜிக் மிஸ்டேக். இந்தியாவே தேடும் ஒரு தீவிரவாத கும்பலுக்கு ஒரே ஒரு நாயை குறிபார்த்து சுட தெரியவில்லை. இவர்கள் எங்கே தீவிரவாத பயிற்சி எடுத்தார்கள் என்று தெரியவில்லை. ஆனால் துப்பாக்கியை முன்பின் பார்த்திராத ஜிவி பிரகாஷ் ஒரே ஒரு குண்டில் தீவிரவாதியை சரியாக குறிபார்த்து சுட்டுவிடுகிறார். பரபரப்பான ஒரு இடத்தில் உள்ள பங்களாவில், அதிலும் முன்னாள் டிஜிபியின் பங்களாவில் பலமணி நேரம் துப்பாக்கி சுடும் சப்தம் கேட்டும் அக்கம் பக்கத்தில் இருந்து யாரும் வரவில்லை, குறைந்தபட்சம் போலீசுக்கு கூட தகவல் சொல்லாமல் இருப்பார்களா?
படத்தின் மிகப்பெரிய பிளஸ்ஸாக நாயின் நடிப்பு என்று விளம்பரம் செய்திருந்தார்கள். அதுமட்டும் தான் ஓரளவுக்கு உண்மை. நாயை பயன்படுத்திய அளவிற்கு கூட இதில் நடித்த நடிகர்களை இயக்குனர் பயன்படுத்தவில்லை. ஆனாலும் நாயின் நடிப்பால் குழந்தைகளுக்கு இந்த படம் ரொம்ப பிடிக்கும் என்று யூடியூபில் வரும் விமர்சனங்களை நம்பி ஏமாற வேண்டாம். குழந்தைகள் பார்த்து ரசிக்கும் காட்சிகள் சுத்தமாக இல்லை.
மொத்தத்தில் ஜிவி பிரகாஷ் கஷ்டப்பட்டு நடித்திருந்தும் வலுவில்லாத திரைக்கதை, ஏகப்பட்ட லாஜிக் மிஸ்டேக் ஆகியவை காரணமாக ஆபரேஷன் சக்ஸஸ், பட் பேஷண்ட் டெட் என்ற அளவில் தான் இந்த படம் உள்ளது
- Read in English