சம்பளத்தை கொரோனா நிவாரண நிதிக்கு அளித்த வாட்ச்மேன்… முதல்வர் செய்த நெகிழ்ச்சி செயல்!
- IndiaGlitz, [Friday,May 14 2021]
சென்னையில் உள்ள தனியார் செக்யூரிட்டி நிறுவனத்தில் பணியாற்றி வரும் வாட்ச்மேன் ஒருவர் தனது ஒரு மாதச் சம்பளத்தை கொரோனா நிவாரண நிதியாகக் கருதி முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு வழங்கி உள்ளார். இதையறிந்த முதல்வர் மு.க.ஸ்டாலின் உடனடியாக அந்த நபரை நேரில் அழைத்து அவருக்கு நன்றி தெரிவித்ததோடு அவரைப் பாராட்டும் விதமாக ஒரு புத்தகத்தையும் பரிசளித்து உள்ளார்.
மயிலாடுதுறையைச் சேர்ந்தவர் தங்கதுரை. இவர் சென்னை சாலிகிராமத்தில் தங்கி ஒரு தனியார் செக்யூரிட்டி நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். தற்போது கொரோனா நோய்த்தொற்றின் இரண்டாவது அலையால் மக்கள் கடும் அவதியுற்று வருகின்றனர். இந்நிலையில் நிலைமையை சமாளிக்க நன்கொடை வழங்குமாறு தமிழக முதல்வர் அறிவிப்பு வெளியிட்டு இருந்தார். மேலும் பேரிடர் காலத்தில் வாங்கப்படும் இந்த தொகைக்கான செலவினங்கள் அனைத்தும் பொது வெளியிடப்படும் எனவும் முதல்வர் தனது அறிக்கையில் குறிப்பிட்டு இருந்தார்.
அந்த வகையில் தற்போது முதல்வரின் பொது நிவாரண நிதி பிரிவுக்கு சினிமா பிரபலங்கள், அரசியல் தலைவர்கள், தொழில் அதிபர்கள் பலரும் தங்களது நன்கொடையை வழங்கி வருகின்றனர். இந்நிலையில் தற்காலிக அடிப்படையில் வாட்ச்மேன் வேலை செய்யும் தங்கதுரை தனது ஒரு மாதச் சம்பளத்தை கொரோனா நிவாரண நிதியாக வழங்கி இருப்பது பலருக்கும் வியப்பை ஏற்படுத்தி உள்ளது. அதோடு நிதி வழங்கிய தங்கதுரையை முதல்வர் நேரில் அழைத்து பாராட்டி இருப்பது மேலும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.