சூர்யாவின் 'சிங்கம்' படத்தை மேற்கோள் காட்டி பேசிய பிரதமர் மோடி!
- IndiaGlitz, [Friday,September 04 2020]
ஐதராபாத்தில் இன்று நடைபெற்ற தேசிய பொலீஸ் அகடமி நிகழ்ச்சி ஒன்றில் பயிற்சி ஐபிஎஸ் அதிகாரிகள் மத்தியில் காணொலி காட்சி மூலம் பேசிய பிரதமர் மோடி, சூர்யாவின் ’சிங்கம்’ படத்தை மேற்கோள்காட்டி பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியபோது ’உங்களுடைய காக்கிச்சட்டை அதிகாரத்தை எப்படி பயன்படுத்துவது என்பதற்கு பதிலாக, அதனை அணிந்தவுடன் நீங்கள் பெருமை கொள்ள வேண்டும். உங்களுடைய காக்கி சட்டை மரியாதையை ஒருபோதும் இழக்கவேண்டாம். போலீஸ் அதிகாரிகள் பணியில் சேரும் போதே நம்மை கண்டு எல்லோரும் பயப்பட வேண்டும், குறிப்பாக நமது ஏரியாவில் உள்ள ரவுடிகள் பயப்பட வேண்டும் என நினைக்கின்றனர்
’சிங்கம்’ போன்ற படங்களைப் பார்த்துவிட்டு தங்களைப் பற்றி அவர்கள் பெரிய அளவில் நினைத்துக் கொள்கின்றனர். அதனால் உண்மையான பணி புறக்கணிக்கப்படுகிறது. நீங்கள் இதனை தவிர்க்க வேண்டும். நமது பணி புறக்கணிக்கப்படவில்லை என்பதை நீங்கள் உறுதி செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார்
மேலும் கொரோனா காலத்தில் காவல்துறையினர் நல்ல முறையில் பணியாற்றியதால் காக்கிச் சீருடையில் இருந்த போலீசாரின் உண்மையான முகம் பொதுமக்களின் மனதில் நன்றாகப் பதிந்து உள்ளது என்றும் அவர் பாராட்டியுள்ளார்
பிரதமர் மேற்கோள் காட்டிய சூர்யாவின் ’சிங்கம்’ படம் தமிழில் மட்டுமின்றி இந்தியில் அஜய்தேவ்கான் நடிப்பில் ரீமேக் ஆனது என்பது குறிப்பிடத்தக்கது.