வேஷ்டி அணிந்தால் அனுமதி கிடையாதா? வணிக வளாக நிர்வாகிகளிடம் பிரபல இயக்குனர் ஆவேசம்
- IndiaGlitz, [Sunday,July 16 2017]
கொல்கத்தாவில் உள்ள மிகப்பெரிய வணிக வளாகம் ஒன்றுக்கு பிரபல திரைப்பட இயக்குனர் அசிஷ் அவிகுந்தக் நேற்று நடிகை தேவலீனா சென் அவர்களுடன் சென்றிந்தார். ஆனால் நடிகையை அனுமதித்த வணிக வளாகத்தின் காவலாளிகள், இயக்குனரை அனுமதிக்க மறுத்துவிட்டனர். அதற்கு அவர்கள் கூறிய காரணம் இயக்குனர் அசிஷ் வேஷ்டி அணிந்திருந்தார் என்றும், பாதுகாப்பு காரணங்களுக்காக வேஷ்டி கட்டியவர்கள் இங்கே நுழைய அனுமதி கிடையாது என்றும் அவர்கள் தெரிவித்தனர்.
இதனால் இயக்குனர் அசிஷ் ஆத்திரமடைந்தார். இதுகுறித்து அவர் தனது சமூக வலைத்தளத்தில் கூறியதாவது: பேண்ட், சட்டை அணிபவர்கள் மட்டுமே தனியார் பொழுதுபோக்கு விடுதிகளுக்குள் அனுமதிக்கப்படும் ஆங்கிலேயர் கால கலாசாரம் இன்றும் இருப்பது தெரிந்த விஷயம். ஆனால், பாதுகாப்பு காரணங்களுக்காக வேட்டி அணிந்து சென்றால் வணிக வளாகத்துக்குள் அனுமதி கிடையாது என்பதை முதல்முறையாக இப்போதுதான் கேள்விப்படுகிறேன். நல்லவேளையாக நான் ஆங்கிலத்தில் விவாதித்து என்னை யார் என்று அடையாளப்படுத்திக் கொண்டதால் வணிக வளாக நிர்வாகிகள் உள்ளே செல்ல அனுமதித்தனர். கொல்கத்தா இவ்வளவு மோசமாகிவிடும் என்று நினைக்கவில்லை'' என்று குறிப்பிட்டு உள்ளார்.
இதுகுறித்து நடிகை தேவலீனா சென் கூறியபோது, 'வேஷ்டி கட்டியதால் அனுமதிக்க மறுத்த காவலாளி, இயக்குனர் ஆங்கிலத்தில் பேசியவுடன் அனுமதித்தனர். அயல்நாட்டு மொழிக்கு கொடுக்கும் மரியாதையை, இந்திய பாரம்பரிய உடைக்கு கொடுக்க மறுத்தது ஏன்? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
இந்திய பாரம்பரிய உடையான வேஷ்டி அணிந்து வந்த ஒருவரை வணிக வளாக காவலாளிகள் மற்றும் நிர்வாகிகள் அவமதித்துவிட்டதாக சமூக வலைத்தளங்களில் கடந்த சில மணி நேரங்களாக விவாதங்கள் நடைபெற்று வருகின்றன.