அதிரடி ஆட்டத்துடன் விடை பெற்ற வார்னர்: இனி என்ன ஆகும் சன்ரைசர்ஸ்?

நேற்று பஞ்சாப் மற்றும் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் போட்டியில் 56 பந்துகளில் 81 ரன்கள் அதிரடியாக அடித்து சன்ரைசர்ஸ் அணியின் வெற்றிக்கு பெரும் காரணமாக இருந்தவர் டேவிட் வார்னர். இந்த நிலையில் நேற்றைய அதிரடி ஆட்டத்துடன் வார்னர் இன்று நாடு திரும்புகிறார்.

உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிக்கு ஆஸ்திரேலியா அணிக்கு தயாராக வார்னர் அழைக்கப்பட்டிருப்பதால் அவர் நாடு திரும்புகிறார். இந்த நிலையில் தான் நாடு திரும்புவது குறித்து நெகிழ்ச்சியுடன் தனது சமூக வலைத்தளத்தில் ஒரு பதிவை வார்னர் பதிவு செய்துள்ளார்.

சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கு எனது நன்றியை எப்படி சொல்வதென்றே எனக்கு தெரியவில்லை. கடந்த இரண்டு ஆண்டுகளிலும் எனக்கு சிறப்பான ஆதரவு அளித்த சன்ரைசர்ஸ் அணியின் உரிமையாளர்கள், நிர்வாகிகள், சக வீரர்கள், சமூக வலைத்தளங்கள் மற்றும் ரசிகர்கள் அனைவருக்கும் எனது நன்றிகள். இந்தத் தொடர் முழுவதும் நான் மகிழ்ச்சிகரமாக விளையாடினேன். இனிவரும் போட்டிகளில் அணி சிறப்பாக செயல்பட வாழ்த்துகள்' என்று குறிப்பிட்டிருந்தார்.

அதேபோல் வார்னரின் மனைவி தனது கணவரின் ஆட்டம் குறித்து கூறுகையில், 'இந்த ஐபிஎல் தொடரில் அற்புதமாக விளையாடினீர்கள். நாங்கள் அனைவரும் உங்களை நினைத்து பெருமைப்படுகிறோம். நீங்கள் பல விளையாட்டு வீரர்களுக்கு உந்துதலாக இருக்கின்றீர்கள் என்று தெரிவித்துள்ளார்.

ஐதராபாத் அணி புள்ளிப்பட்டியலில் 12 புள்ளிகள் மட்டுமே எடுத்துள்ள நிலையில் அடுத்து சுற்றுக்கு செல்ல இன்னும் இரண்டு போட்டிகளில் வென்றாக வேண்டிய நிலை உள்ளது. வார்னர் இல்லாத சன்ரைசர்ஸ் அணி அடுத்த சுற்றுக்கு செல்லுமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்