துப்புரவு பணியாளர்களுக்கு 'பாகுபலி 2' பட டிக்கெட்டுக்களை கொடுத்த கலெக்டர்
- IndiaGlitz, [Thursday,April 27 2017]
பிரமாண்ட இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமெளலியின் 'பாகுபலி 2' படத்திற்கு இதுவரை இல்லாத அளவில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இன்னும் சில மணி நேரங்களில் வெளிநாடுகளில் இந்த படத்தின் முதல் காட்சி தொடங்கவுள்ள நிலையில் கட்டப்பா ரகசியம் வெகுவிரைவில் தெரிந்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் 'பாகுபலி 2' படத்தை பார்ப்பதற்காக பலர் அலுவலகங்களுக்கு விடுமுறை கேட்டு விண்ணப்பித்துள்ளதாக சமூக வலைத்தளங்களில் செய்தி வெளிவந்துள்ளது. இவர்களில் ஒருவர் காவல்துறையை சேர்ந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் தெலங்கானா மாநிலத்தின் வாரங்கல் மாவட்ட ஆட்சியர் அமர்பளி கட்டா என்பவர் வாரங்கல் மாவட்டத்தை அழகாகவும் தூய்மையாகவும் பாதுகாத்து வரும் அதிகாரிகளையும், துப்புரவுப் பணியாளர்களையும் பாராட்டும் வகையில் 'பாகுபலி 2' திரைப்படத்தை மிகப்பெரிய மல்டி-ப்ளெக்ஸ் திரையரங்கில் முதல் நாள் முதல் காட்சியை காண இலவச டிக்கெட்டுக்களை கொடுத்துள்ளார். இந்த டிக்கெட்டுக்களின் மதிப்பு ஒவ்வொன்றும் ரூ.500 என்பது குறிப்பிடத்தக்கது.
துப்புரவு பணியாளர்களின் உழைப்பை ஊக்குவிக்கும் வகையில் இந்த பரிசை கொடுத்ததாக கலெக்டர் கூறியுள்ளார்.