பாகிஸ்தான் அரையிறுதி வாய்ப்பை இந்தியா தடுத்ததாக வக்கார் யூனுஸ் புகார்
- IndiaGlitz, [Monday,July 01 2019] Sports News
நேற்று இங்கிலாந்து அணியிடம் இந்திய அணி அடைந்த தோல்வி இந்தியாவை விட பாகிஸ்தானை ரொம்பவே பாதித்துள்ளது. நேற்று மட்டும் இந்தியா வெற்றி பெற்றிருந்தால் பாகிஸ்தான் மிக எளிதில் அரையிறுதிக்கு செல்லும் வாய்ப்பை பெற்றிருக்கும். இப்போது பாகிஸ்தானா? அல்லது இங்கிலாந்தா? என்ற இரண்டாங்கெட்டான் நிலை உள்ளது.
இந்த போட்டியில் தோனி மற்றும் கேதார் ஜாதவ் ஆகிய இருவரின் ஆமை வேக ஆட்டம் குறித்து ஒருபக்கம் விமர்சனங்கள் எழுந்து வரும் நிலையில் முன்னாள் பாகிஸ்தான் வீரர் வக்கார் யூனுஸ் தனது டுவிட்டரில் இந்தியாவை மறைமுகமாக தாக்கி டுவீட் ஒன்றை பதிவு செய்துள்ளார்.
அவர் தனது டுவிட்டரில், ' இப்போது நீங்கள் செய்த செயல் நீங்களாகச் செய்யவில்லை. வாழ்க்கையில் என்ன நீங்கள் செய்கிறீர்களோ அது உங்களை தீர்மானிக்கும். பாகிஸ்தான் அணி அரையிறுதிக்குச் செல்வதோ அல்லது இல்லையோ அதைப் பற்றி நான் கவலைப்படவில்லை. ஆனால் ஒரு விஷயம் உறுதியானது. சில சாம்பியன்களின் உண்மையான கிரிக்கெட் நேர்மை, பெருந்தன்மை சோதிக்கப்பட்டது. அதில் அவர்கள் தோல்வி அடைந்துவிட்டார்கள்' என்று குறிப்பிட்டுள்ளார். வக்கார் யூனுஸின் இந்த டுவிட்டுக்கு பலர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
ஆனால் பாகிஸ்தான் வீரர்கள் என்னமோ நேர்மையின் அடையாளம் போல் பேசி கொண்டிருக்கின்றனர். கும்ளே கடந்த 1999ஆம் ஆண்டு டெஸ்ட் போட்டி ஒன்றில் 9 விக்கெட்டுக்களை எடுத்த நிலையில் வாசிம் அக்ரமும் வக்கார் யூனுசும் பேட்டிங் செய்து கொண்டிருந்தனர். அந்த சமயத்தில் வக்கார் யூனுஸ், வாசிம் அக்ரமிடம் கும்ளே 10 விக்கெட்டுக்கள் எடுப்பதை தவிர்க்க நான் ரன் அவுட் ஆகிவிடவா? என்று வாசிம் அக்ரமிடம் கேட்டாராம். ஆனால் இன்னொரு முனையில் வாசிக் அக்ரம் அவுட் ஆகி கும்ளே பத்து விக்கெட் சாதனையை படைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனை வாசிம் அக்ரம் ஒரு பேட்டியில் கூறியிருந்தார்.
It's not who you are.. What you do in life defines who you are.. Me not bothered if Pakistan gets to the semis or not but one thing is for sure.. Sportsmanship of few Champions got tested and they failed badly #INDvsEND #CWC2019
— Waqar Younis (@waqyounis99) June 30, 2019