ஆர்யன்கான் வழக்கை விசாரணை செய்த அதிகாரி சென்னைக்கு மாற்றம்!
- IndiaGlitz, [Tuesday,May 31 2022]
பிரபல பாலிவுட் நடிகர் ஷாருக்கான் மகன் ஆர்யன்கான் வழக்கை விசாரித்த விசாரணை அதிகாரி சென்னைக்கு மாற்றப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் மும்பையில் உள்ள சொகுசு கப்பலில் போதை பொருள் பயன்படுத்தியதாக ஆர்யன்கான் கைது செய்யப்பட்டார். இதனை அடுத்து அவரிடம் காவல்துறையினர் தீவிர விசாரணை செய்தனர்.
போதைப்பொருள் தடுப்பு அதிகாரி சமீர் வான்கடே தலைமையில் இந்த விசாரணை நடைபெற்றபோது சமீர் வான்கடே முறையாக இந்த வழக்கை விசாரிக்கவில்லை என்றும் ஆர்யன்கானை குற்றவாளி ஆக்குவதில் மட்டுமே குறியாக இருந்து அதன் மூலம் பலன் பெற முயற்சி செய்ததாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன.
இதனையடுத்து சமீர் வான்கடே மீது விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டு இருந்த நிலையில் சமீபத்தில் ஆரியன்கான் போதைப்பொருள் வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டார். அவர் போதைப்பொருள் வைத்திருந்ததாகவோ, பயன்படுத்தியதாகவோ எந்தவித ஆதாரமும் இல்லை என கூறி ஆர்யன்கானை இந்த வழக்கில் இருந்து நீதிமன்றம் விடுவித்தது.
இந்த நிலையில் ஆர்யன்கான் வழக்கை விசாரணை செய்த சமீர் வான்கடே மீது மீது லஞ்சப் புகார் உள்பட ஒருசில புகார்கள் வந்ததை அடுத்து அவர் தற்போது சென்னைக்கு மாற்றப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சென்னையில் உள்ள வரி வரிசெலுத்துபவர்களுக்கான சேவைகள் இயக்குனர் அலுவலகத்திற்கு அவர் மாற்றப்பட்டு உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.