கொரோனா பாதித்த நுரையீரல் எப்படி இருக்கும் தெரியுமா..? 3டி வீடியோ வெளியிட்ட மருத்துவர்கள்.

  • IndiaGlitz, [Friday,March 27 2020]

கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளவரின் நுரையீரல் எவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளது என காண்பதற்காக மருத்துவர்கள் முப்பரிமாண விர்ச்சுவல் ரியாலிட்டி வீடியோ ஒன்று வெளியிட்டுள்ளனர்.

சீனாவில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸானது தற்போது உலகம் முழுக்க 180 நாடுகளில் பரவியுள்ளது. 5,52,599 பேர் இதுவரை உலகம் முழுவதும் பாதிக்கப்பட்டுள்ளனர். 1,28,706 குணமாகி வீடு திரும்பியுள்ளனர். பாதிக்கப்பட்டவர்கள் பட்டியலில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. மருத்துவத் துறையை சேர்ந்தவர்கள் இந்த வைரஸிற்கான எதிர்ப்பு மருந்தினை கண்டறிய தீவிர முயற்சிகள் எடுத்து வருகிறார்கள்.

இந்நிலையில் கொரோனா வைரஸ் பாதித்தவரின் நுரையீரலை ஸ்கேன் செய்து முப்பரிமாண வீடியோ ஒன்றை வாஷிங்டன் டிசியை சேர்ந்த மருத்துவர்கள் வெளியிட்டுள்ளனர். இந்த வீடியோவானது இணையத்தில் வைரலாக பரவி வருகின்றது. அந்த வீடியோவில் கொரோனா பாதித்த நுரையீரலை பற்றி ஜார்ஜ் வாஷிங்க்டன் பல்கலைக்கழக அறுவை சிகிச்சை நிபுணர் கீத் மோர்ட்டன் விளக்குகிறார்.

வீடியோவில் மஞ்சள் நிறத்தில் இருக்கும் பகுதிகள் வீக்கமடைந்து பாதிக்கப்பட்டுள்ளதாகவும், நுரையீரலின் மற்ற பகுதிகள் இதே போல் பாதிக்கப்பட்டு நோயாளிகள் மூச்சு விட சிரமப்படுவதாகவும், அவர் தெரிவிக்கின்றார். மேலும் கொரோனவால் பாதிக்கப்படுபவர்களின் நுரையீரல் நல்ல நிலைமைக்கு திரும்ப நீண்ட நாட்கள் ஆகும். எனவே கவனமாக இருக்குமாறு மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.