தேமுதிகவின் சுயநல அரசியலுக்கு மக்கள் கொடுத்த சவுக்கடி:
- IndiaGlitz, [Friday,May 24 2019]
அரசியல்வாதிகள் ஐந்து வருடங்கள் செய்யும் அட்டகாசங்களை மக்கள் அமைதியாக வேடிக்கை பார்த்து, தங்களுடைய முழு கோபத்தையும் ஒட்டு மொத்தமாக காட்டும் நாள் தான் தேர்தல் நாள். என்ன செய்தாலும் மக்கள் கண்டுகொள்ள மாட்டார்கள் என்ற அரசியல்வாதிகளின் மெத்தன போக்கிற்கு சரியான சவுக்கடி கொடுத்துள்ளனர் மக்கள்.
குறிப்பாக திமுக, அதிமுகவுக்கு மாற்றாக உருவான கட்சி விஜயகாந்தின் தேமுதிக. தனது கடின உழைப்பால் மக்கள் செல்வாக்கை பெற்ற விஜயகாந்த் முதல் தேர்தலிலேயே ஒரே ஒரு தொகுதியை பெற்றாலும் தமிழகம் முழுவதும் குறிப்பிடத்தக்க வாக்கு சதவிகிதத்தை பெற்றார். பின்னர் அதிமுகவுடன் கூட்டணி அமைத்து இரண்டாவது தேர்தலில் எதிர்க்கட்சி தலைவரானார். கூட்டணி கட்சி என்பதற்காக அதிமுகவுக்கு ஜால்ரா அடிக்காமல் அரசு செய்யும் தவறையும் ஆங்காங்கே சுட்டிக்காட்டினார்.
ஆனால் அவர் உடல்நலமின்றி அரசியலில் இருந்து கிட்டத்தட்ட ஒதுங்கிவிட்ட நிலையில் கட்சியை கையில் எடுத்த அவரது மனைவியும் மைத்துனரும் கட்சியை தங்கள் சுயநலத்திற்காக பயன்படுத்தி கொண்டனர். ஒரே நேரத்தில் திமுக, அதிமுக என இரண்டு கூட்டணியிலும் அரசியல் நாகரீகமின்றி பேரம் பேசினர். கொள்கை எதுவுமின்றி அதிக இடம், அதிக பணம் என்ற பேரம் மட்டுமே அவர்களது பேச்சுவார்த்தையில் இருந்தது. இதனால் உண்மையான தேமுதிக தொண்டர்களே அதிருப்தி அடைந்தனர். இதையெல்லாம் வேடிக்கை பார்த்து கொண்டிருந்த பொதுமக்கள், இந்த தேர்தலில் அக்கட்சிக்கு சரியான சவுக்கடியை கொடுத்துள்ளனர். குறிப்பாக கள்ளக்குறிச்சி தொகுதியில் எல்.கே.சுதீஷ் படுதோல்வி அடைந்துள்ளார்.
கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் மற்றும் சீமானின் நாம் தமிழர் கட்சிக்கு கிடைத்த கெளரவமிக்க ஓட்டு சதவீதம் கூட தேமுதிகவுக்கு கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.