உள்ளாட்சி தேர்தலில் விஜய்யின் வெற்றி: ரசிகர்கள் மகிழ்ச்சி

  • IndiaGlitz, [Tuesday,January 07 2020]

சமீபத்தில் தமிழகத்தில் நடைபெற்று முடிந்த ஊரக உள்ளாட்சி தேர்தலில் அதிமுக மற்றும் திமுக கிட்டத்தட்ட சம அளவில் வெற்றி பெற்றுள்ளனர். இந்த வெற்றியில் விஜய்யின் மக்கள் இயக்க நிர்வாகிகளும் உண்டு என்பது விஜய் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியான தகவலாக உள்ளது. ஆம், விஜய் மக்கள் இயக்கத்தின் சார்பில் போட்டியிட்ட பலர் வெற்றி பெற்றுள்ள செய்தி தற்போது வெளிவந்துள்ளது.

திருச்சி மாவட்டம் தொட்டியம் ஒன்றிய ஆரம்ப ஒரு கிராம ஊராட்சி எட்டாவது வார்டு உறுப்பினராக விஜய் மக்கள் இயக்க ஒன்றிய விவசாய அணி செயலாளர் லோகேஸ்வரன் என்றவர் வெற்றி பெற்றுள்ளார். அதேபோல் விஜய் மக்கள் இயக்க மாவட்ட துணை செயலாளர் கலைவாணன் என்பவர் லால்குடி ஒன்றியம் சிறு மருதூர் கிராம ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினராக வெற்றி பெற்றுள்ளார்.

மேலும் விஜய் மக்கள் இயக்கத்தின் மகளிர் நிர்வாகி சங்கீதா என்பவர் மணிகண்டம் ஒன்றியம் நாகமங்கலம் ஊராட்சி 5வது வார்டு உறுப்பினராக வெற்றி பெற்றுள்ளார். மேலும் திருவெறும்பூர் ஒன்றியம் திருநெடுங்குளம் கிராம ஊராட்சியின் 3வது வார்டு உறுப்பினராக விஜய் மக்கள் இயக்க உறுப்பினர் சரவணன் என்பவர் வெற்றி பெற்றுள்ளார்.

இந்த நிலையில் வெற்றி பெற்ற கவுன்சிலர்கள் அனைவரும் நேற்று தங்கள் பொறுப்பை ஏற்றுக்கொண்டு விஜய் மக்கள் இயக்க மாவட்ட தலைவர் ராஜா உள்பட நிர்வாகிகளிடம் வாழ்த்துக்களை பெற்றனர். அதிமுக, திமுக என இரண்டு பெரிய கூட்டணிகளை எதிர்த்து விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் பெற்றுள்ள இந்த வெற்றி ஆரம்பம்தன் என்றும் இனி அடுத்தடுத்த தேர்தல்களில் வெற்றிகள் குவியும் என்றும் விஜய் ரசிகர்கள் உற்சாகத்துடன் தெரிவித்து வருகின்றனர்.