அரியலூர் மாணவி ரங்கீலா விவகாரம்: விஜய் நற்பணி மன்றம் விளக்கம்
- IndiaGlitz, [Thursday,September 14 2017]
தளபதி விஜய் மாணவர்களின் கல்வி உள்பட பல்வேறு உதவிகளை விளம்பரம் இன்றி செய்து வருகிறார் என்பது அவருக்கு நெருக்கமானவர்களுக்கு நன்றாக தெரியும். இந்த நிலையில் விஜய் ரசிகர் ஒருவர் அரியலூர் மாணவி ரங்கீலா என்பவரின் மேற்படிப்புக்கு உதவி செய்வதாக பொய்யான வாக்குறுதி கூறி ஏமாற்றியதாக கடந்த இரண்டு நாட்களாக செய்திகள் வெளிவந்து கொண்டிருந்தன. இந்த நிலையில் விஜய் நற்பணி மன்றம் இதுகுறித்து விளக்க அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
அரியலூர் மாவட்ட மாணவி ரங்கீலாவுக்கு பொய்யான வாக்குறுதி கொடுத்து ஏமாற்றிய ஜோஸ்பிரபு என்பவர் விஜய் நற்பணி மன்றத்தில் இருந்து நீக்கப்பட்டவர் என்றும், அவர் அளித்த வாக்குறுதிகள் குறித்து இயக்கத்தின் உள்ளூர் நிர்வாகிகள் உள்பட யாருக்கும் தெரியாது என்றும், இதுகுறித்து ஒருசில ஊடகங்கள் விஜய் நற்பணி இயக்கமே ஏமாற்றியதாக பொய்யான தகவல்களை பரப்பி வருவதாக குறிப்பிடப்பட்டிருந்தது
மேலும் மாணவர்கள் மீது மதிப்பும் மரியாதையும் வைத்துள்ள தளபதியும் அவரது ரசிகர்களாகிய நாங்களும் மாணவி ரங்கீலாவின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு அவரது கல்வி தொடர நிதியுதவி செய்ய தயாராக இருப்பதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த விளக்க அறிக்கையை தொடர்ந்து இந்த பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைத்ததாக கருதப்படுகிறது