தமிழகத்துக்குப் புது முதல்வர். ஓபிஎஸ் பதவி விலகல்
- IndiaGlitz, [Sunday,February 05 2017]
முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதா மரணமடைந்தபின் முதல்வராகப் பொறுப்பேற்றுக்கொண்ட ஓ.பன்னீர்செல்வம் பதவி விலகப் போகிறார் என்றும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் பொதுச் செயலாளர் வி;கே.சசிகலா தமிழகத்தின் அடுத்த முதலமைச்சராகப் பொறுப்பேற்பார் என்று கட்சியின் சார்பில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இன்று சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சித் தலைமை அலுவலகத்தில் அதிமுகவின் சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் நடந்தது. 45 நிமிடங்கள் நடந்ததாகக் கூறப்படும் அந்தக் கூட்டத்தில் கட்சியின் சட்டமன்றத் தலைவராக சசிகலா ஒரு மனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவரது பெயரை ஓபிஎஸ் முன்மொழிந்தார்.
இதன் மூலம் சசிகலா தமிழக முதல்வராக விரைவில் பொறுப்பேற்பார் என்று கட்சியின் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
நாளை (ஃபிப்ரவரி 6) அல்லது தைப்பூசத் திருநாளான வியாழக்கிழமை (ஃபிப்.9) அன்று சசிகலா முதல்வராகப் பதவிப் பிரமாணம் ஏற்றுக்கொள்வார் என்று கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மேலும் பதவி ஏற்றவுடன் ஆளுநர் வித்யாசாகர் ராவை சந்தித்து நியதிப்படி, அரசு அமைப்பதற்கான அதிகாரத்தைக் கோருவார் சசிகலா என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழக வரலாற்றில், வி.என்.ஜானகி, ஜெயலலிதாவுக்குப் பிறகு மூன்றாவது பெண் முதல்வர் ஆகப் போகிறார் சசிகலா.