சோலோ- கார்ப்பரேட்? புது சர்ச்சையை கிளப்பி இருக்கும் விஜே அர்ச்சனாவின் வீடியோ! நடந்தது என்ன?
Send us your feedback to audioarticles@vaarta.com
கொரோனா பரவல் காரணமாக இளசு முதல் பெருசு வரை தற்போது அனைவரும் செல்போனிலேயே நேரத்தை செலவழித்து வருகிறோம். அதிலும் டிக்டாக் போன்ற சில செயலிகள் இந்தியாவில் தடை செய்யப்பட்டதில் இருந்து தற்போது யூடியூப் மட்டுமே ஒரே ஆறுதலாக இருந்து வருகிறது. இந்த யூடியூப்பிலும் காப்பிரைட் சிக்கல் இருப்பதாக அவ்வபோது சில விவாதங்கள் முளைக்கும். அப்படியொரு பிரச்சனைத்தான் தற்போது விஜே அர்ச்சனா வெளியிட்டு உள்ள பாத்ரூம் டூர் குறித்த விடியோவிலும் நடந்து இருக்கிறது.
ஜீ தமிழ் அடுத்து பிக்பாஸ் தற்போது விஜய் டிவி எனத் தமிழ் தொலைக்காட்சிகளில் பிரபலமான தொகுப்பாளினியாகச் செயல்பட்டு வருபவர் அர்ச்சனா. இவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு பாத்ரூம் டூர் என்ற ஒரு வீடியோவை “வாவ் லைஃப்“ எனும் யூடியூப் பக்கத்தில் வெளியிட்டு இருந்தார். இந்த யூடியூப் பக்கத்தை அர்ச்சனாவின் தங்கை மற்றும் அவரது மகள் இருவரும் இயக்கி வருவதாகக் கூறப்படுகிறது. லைஃப் ஸ்டைல் குறித்த வீடியோக்களை பதிவிடும் இந்த வாவ் லைஃப் சேனல் இயல்பாக அர்ச்சனா வீட்டு பாத்ரூம் குறித்தும் வீடியோவை வெளியிட்டு இருந்தது.
ஆனால் இந்த வீடியோவைப் பார்த்த சில நெட்டிசன்கள் கிண்டலடித்து கமெண்டுகளைப் பதிவிட்டு வந்தனர். இதற்கு ஒருபடி மேலே சென்று சோலோ கிரியேட்டர்கள் என அழைக்கப்படும் குட்டி குட்டி யூடியூப் சேனலை வைத்து இருக்கும் சிலர் அர்ச்சனாவின் வீடியோவை ட்ரோல் செய்து நக்கலடிக்கத் தொடங்கினர். இதைவிடவும் சில யூடியூபர்கள் தகாத வார்த்தைகளால் அர்ச்சனாவை திட்டியும் அவரது மகளைத் திட்டியும் ட்ரோல் செய்ததாகக் கூறப்படுகிறது. அதோடு அர்ச்சனாவின் கணவருக்கு போன் செய்து அவரைத் திட்டுவதாகவும் அர்ச்சனா குற்றம் சாட்டி இருந்தார்.
இப்படி பாத்ரூம் டூர் எனும் ஒரு வீடியோவால் கடந்த சில தினங்களாக யூடியூப் பக்கமே கடும் விவாதத்தில் தத்தளித்து வந்தது. இந்நிலையில் கடந்த சில தினங்களாக சற்று ஓய்ந்து போன இந்த பிரச்சனை நேற்று முதல் மீண்டும் தலைத்தூக்கத் துவங்கி இருக்கிறது. காரணம் அர்ச்சனா தனது வீடியோவை ட்ரோல் செய்ததற்காக பல யூடியூப் சேனல்களுக்கு காப்பிரைட் எனப்படும் வயலேஷன் ஸ்ட்ரைக் கொடுத்து விட்டதாக பல யூடியூப்காரர்கள் குற்றம் சாட்டத் துவங்கி உள்ளனர்.
அதிலும் பிரியாணி மேன் எனப்படும் ஒரு யூடியூப் பக்கம் இந்த காப்பிரைட் பிரச்சனையால் முடக்கப்பட்டு விட்டதாகவும் கூறப்படுகிறது. அதாவது யூடியூப் என்பது பொது மக்கள் தங்களது கருத்துகளைக் கூறும் ஒரு பொதுத்தளமாக செயல்பட்டு வருகிறது. இந்தப் பக்கத்தில் மற்ற வீடியோக்களையோ, தரவுகளையோ எடுத்து பயன்படுத்துவது காப்பிரைட் (காப்பு உரிமை) ஆக கருதப்படும். இந்த அடிப்படையில்தான் தற்போது அர்ச்சனா தனது வீடியோவை எடுத்துப் பயன்படுத்தி இருக்கிறார்கள். மேலும் தகாத வார்த்தைகளால் எனது மகளை திட்டி இருக்கிறார்கள். இது ட்ரோல் என்பதைவிடவும் மற்றவர்கள் மீது Abuse செய்வதற்கு ஈடானது.
யூடியூபில் மற்றவர்களை இப்படி தவறான வார்த்தைகளில் திட்டும்போது அதை Abuse ஆக எடுத்துக் கொள்வதற்கும் அதற்கு தண்டனை கொடுப்பதற்கும் எந்த வழியும் இல்லை. அதனால் என்னுடைய வீடியோவை ட்ரோல் செய்த பெரும்பாலான சேனல்களுக்கு நான் காப்பிரைட் ஸ்ரைக் கொடுத்து விட்டேன் எனத் தெரிவித்து உள்ளார். இந்த விஷயத்தில் அர்ச்சனா தனக்கு நேர்ந்த அனுபவத்தை வைத்து காப்பிரைட் ஸ்ரைக் கொடுத்து இருக்கிறார்.
ஆனால் சோலோ கிரியேட்டர்கள் எனப்படும் குறைந்த சப்ஸ்கிரைஃப்களைக் கொண்டு இருக்கும் பலர் தற்போது விஜே அர்ச்சனாவின் இந்தச் செயலுக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இதனால்தான் தற்போது மீண்டும் பாத்ரூம் டூர் குறித்த வீடியோ பேசு பொருளாக மாறியிருக்கிறது.
யார் இந்த சோலோ கிரியேட்டர்கள்?
சமையல், செய்தி, பேஷன், உடை, கல்வி, விவசாயம், கிரியேட்டிவ் திங் என்ற அடிப்படைகளில் பலரும் வீடியோக்களை எடுத்து அதை யூடியூப்பில் பதிவிட்டு வருகின்றனர். இதைத்தவிர சினிமா பிரபலங்களையும் மற்றவர்கள் வெளியிடும் வீடியோக்களையும் ட்ரோல் செய்து சிலர் பொழுதுபோக்குக்காக வீடியோ போடுவதை வழக்கமாகக் கொண்டு உள்ளனர். இப்படி போடும் எல்லா வகையான வீடியோக்களும் 5 மில்லியன்களைத் தாண்டும் போதுதான் சில ஆயிரத்தை வருமானமாக பெற முடியும். ஆனால் குறைந்த சப்ஸ்கிரைஃப்களை கொண்டு இருக்கும் இந்த சோலோ கிரியேட்டர்கள் இதுபோன்ற சம்பளத்தை வாங்குவது என்பது குதிரை கொம்புதான்.
மேலும் வீடியோ எடுப்பதற்கு தேவையான டெக்னாலஜியோ, ஆள் பலமோ, பண பலமோ இல்லாமல் பல வருடமாகக் கஷ்டப்பட்டு இந்த சோலோ கிரியேட்டர்கள் வீடியோக்களை யூடியூப்பில் பதிவிட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது. ஆனால் பிரபலங்களுக்கு இதுபோன்ற எந்த சிரமமும் இருப்பது இல்லை. டிவி, சினிமாவில் பிரபலமாக இருக்கும் சிலர் தற்போது கொரோனா நேரத்தில் சேனல் தொடங்கி அதில் வீடியோக்களை பதிவிட்டு சம்பாதிக்க தொடங்கி விட்டனர்.
இதுபோன்ற பிரபலங்களின் வீடியோக்களுக்கு பெரிய பெரிய காப்பரேட் கம்பெனிகள் வலிய வந்து விளம்பரங்கள் கொடுப்பதும் அதோடு டெக்னாலஜி கொண்ட ஒரு பெரிய டீமே இவர்களுக்காக உழைப்பதும் குறிப்பிடத்தக்கது. இதனால் குறைந்த நாட்களிலேயே அதிக சப்ஸ்கிரைஃப்களைப் பெற்று அதன் மூலம் வருமானத்தை பெறவும் இந்த பிரபலங்களால் முடிகிறது. இந்த அடிப்படையில்தான் தற்போது சோலோ கிரியேட்டர்கள் அர்ச்சனாவின் காப்பிரைட் ஸ்ரைக்கிற்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
காரணம் இந்த காப்பிரைட் ஸ்ரைக்கை 3 முறை வாங்கும் எந்த பெரிய சேனலும் அடுத்து தனாக முடக்கப்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது. இதனால் யூடியூப் போன்ற ஒரு பொதுத்தளத்தில் ஒருவர் கருத்தை பதிவிடும்போதும் அதை மற்றவர்கள் விமர்சிக்கும்போதும் பொது நாகரிகத்தையும் மனிதநேயத்தையும் கடைப்பிடிக்க வேண்டியது மிகவும் அவசியம். இந்த நாகரிகம் எனும் தன்மை அற்றுப் போகும்போது தனாகவே இதுபோன்ற சிக்கல்கள் முளைத்து அது இறுதியில் எளியவர்களுக்கு பெரிய இழப்பாக மாறிப்போவதும் இந்த விஷயத்தில் நடந்து இருப்பதும் குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments