விவேக் செய்த கடைசி போன் கால்: நடிகர் கொட்டாச்சி உருக்கமான தகவல்!

  • IndiaGlitz, [Wednesday,April 21 2021]

பிரபல காமெடி நடிகர் விவேக் சமீபத்தில் மாரடைப்பால் மரணம் அடைந்த நிலையில் அவரது மறைவு தமிழ்த்திரை உலகையே உலுக்கி உள்ளது. இந்த நிலையில் தமிழ் திரையுலக பிரபலங்கள் பலர் விவேக் உடனான தங்களுடைய மலரும் நினைவுகளை சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்

அந்த வகையில் விவேக் தனக்கு செய்த கடைசி போன் கால் குறித்து நடிகர் கொட்டாச்சி தெரிவித்துள்ளார். அந்த போன் காலில் விவேக் கூறியிருப்பதாவது: உன்னுடைய குறும்படத்தை யூடியூபில் நான் பார்த்தேன். ரொம்ப உருக்கமாக இருந்தது. இது எல்லோருக்கும் இருக்கக்கூடிய கஷ்டம்தான். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு லெவலில் கஷ்டம் இருக்கும். உலகம் முழுக்க எல்லோரும் பாதிக்கப்பட்டுள்ளனர். இயற்கை நம்மேல் கருணை வைத்து சீக்கிரமாக இதை சரி செய்து மறுபடியும் நமக்கு படப்பிடிப்பு ஆரம்பித்து எல்லோரும் ஒன்றாக வேலை செய்ய வேண்டும்

ஆனால் இந்த ஆறு மாத காலம் மனதுக்குள் ஒரு தெளிவை ஏற்படுத்தி உள்ளது. எப்படி என்றால் பழைய நண்பர்களை எல்லாம் மீண்டும் அழைத்து நம்மோடு சேர்த்து வைத்து வேலை கொடுக்க வேண்டும் என்ற நினைப்பு என் மனதில் ஏற்பட்டு உள்ளது. அதற்கு உன்னுடைய குறும்படம் எனக்கு ஒரு தூண்டுதலாக இருந்தது. அது நிச்சயம் நான் செய்வேன். உனக்கும் உன் குடும்பத்துக்கும் உன்னுடைய பொண்ணுக்கும் என்னுடைய வணக்கங்கள் வாழ்த்துக்கள்’ என்று அந்த போன் காலில் விவேக் கூறியுள்ளார். இந்த ஆடியோ தற்போது வைரலாகி வருகிறது