கண்டனம் தெரிவித்த சிவாஜி ரசிகர்களுக்கு விவேக் அளித்த விளக்கம்!

  • IndiaGlitz, [Wednesday,September 25 2019]

விஜய் நடித்த ’பிகில்’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றதில் இருந்து அந்தத் திரைப்படத்திற்கு நாலாபுறமும் இருந்து பிரச்சனைகள் தலைதூக்கி வருகின்றன. ‘பிகில்’ இசை விழாவில் விஜய் பேசிய கருத்துக்கு ஒரு பக்கம் அரசியல்வாதிகள் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில், இன்னொரு பக்கம் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவிற்கு எதன் அடிப்படையில் இடம் வழங்கப்பட்டது என தமிழக அரசின் உயர் கல்வித்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

மேலும் இறைச்சி கடை உரிமையாளர்கள் சங்கம் திடீர் என ’பிகில்’ படத்திற்கு எதிராக போராட்டத்தை தொடங்கியுள்ளனர். அதுமட்டுமின்றி சிவாஜி ரசிகர்கள் இந்த பட விழாவில் விவேக் பேசிய கருத்து குறித்து தங்களது கண்டனத்தை தெரிவித்துள்ளனர். இவ்வாறு நாலாபுறமும் இருந்து ’பிகில்’ படத்திற்கு கண்டனங்கள் குவிந்து வந்தாலும் இன்னொருபுறம் இந்த படத்திற்கு இலவச விளம்பரம் கிடைத்து வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் நடிகர் விவேக் பேசிய பேச்சுக்கு கண்டனம் தெரிவித்த சிவாஜி ரசிகர்களுக்கு தற்போது விவேக் தனது சமூக வலைத்தளத்தில் விளக்கமளித்துள்ளார். அவர் கூறியதாவது: 1960ல் இரும்புத்திரை படத்தில் நடிகர் திலகம் சிவாஜி அவர்கள் பாடிய பாடலின் முதல் வரி“நெஞ்சில் குடி இருக்கும். அப்போது அது காதல் உணர்வைக் குறித்தது. ஆனால் இப்போது சகோ விஜய் அதை சொல்லும் போது மந்திர சக்தி வார்த்தையாக இருக்கிறது. இதுவே நான் பேசியது. அன்பு உள்ளங்கள் புரிந்து கொள்க’ என்று விளக்கம் அளித்துள்ளார். இந்த விளக்கத்தை ஏற்று சிவாஜி ரசிகர்கள் அமைதியாவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.