'விவேகம்' காஜல் அகர்வாலின் 'மோர்ஸ் கோட்' குறித்து தெரிந்து கொள்ளுங்கள்
- IndiaGlitz, [Thursday,August 31 2017]
கோலிவுட் திரையுலகின் பல திரைப்படங்கள் நாம் இதுவரை கேள்விப்படாத பல விஷயங்களை நமக்கு கற்று கொடுத்துள்ளது. கமல்ஹாசனின் 'அன்பே சிவம்' சுனாமியையும், ஏ.ஆர்.முருகதாஸின் 'ஏழாவது அறிவு' போதிதர்மரையும், துப்பாக்கி திரைப்படம் ஸ்லீப்பர் செல்லையும் நமக்கு கற்று கொடுத்தது. இந்த படங்கள் வெளிவருவதற்கு முன்பே இந்த சொற்களை கூட பலர் கேள்விப்பட்டிருக்க கூட மாட்டார்கள்.
அந்த வகையில் கடந்த வாரம் வெளிவந்த அஜித்தின் 'விவேகம்' திரைப்படம் நமக்கு 'மோர்ஸ் கோட்' என்பதை கற்றுக்கொடுத்துள்ளது. அஜித்தும் காஜல் அகர்வாலும் கண்களில் பேசி கொள்ளும் மோர்ஸ் கோட் உண்மையில் இருக்கின்றதா? என்று பலருக்கு சந்தேகம் இருக்கும். ஆம் இது உண்மைதான். இந்த மோர்ஸ்கோட் முறையை 1836ஆம் ஆண்டு சாமுவேல் பி.மோர்ஸ் என்பவர் கண்டுபிடித்தார். அந்த காலத்தில் விரைவான தகவல் பரிமாற்றத்திற்காக கண்டுபிடிக்கப்பட்ட இந்த குறியீடுகளை ராணுவத்தினர் உள்பட முக்கியமானவர்கள் கற்று கொண்டனர்.
மோர்ஸ் கோடுகள் புள்ளி, கோடு, சைகை, கண்களை இமைப்பது, ஒளிவிளக்குகள் ஆகியவற்றின் மூலம் செய்தியை அனுப்பும் ஒரு தந்திக்குறிப்பு. வியட்நாம் போரின்போது அந்நாட்டின் சிறையில் சித்ரவதை அனுபவித்த அமெரிக்க வீரர் ஒருவர் தொலைக்காட்சி பேட்டி ஒன்றின்போது இந்த மோர்ஸ் கோட்-ஐ பயன்படுத்திதான் தான் சித்ரவதை அனுபவிப்பதை உலகிற்கு வெளிப்படுத்தினார். இதன் பின்னர் தான் அவர் அமெரிக்க ராணுவத்தால் மீட்கப்பட்டார்.
இன்றைய தொலைத்தொடர்பு சாதனங்களுக்கு முன்னோடியாக இருக்கும் இந்த மோர்ஸ் கோட்-ஐ முறைப்படி முயற்சித்தால் யாரும் கற்றுக்கொள்ளலாம் என்பதே உண்மை.