சினிமா எல்லாம் அப்புறம்தான்! முதல்ல விவசாயம்: 'விவேகம்' வெற்றி
- IndiaGlitz, [Sunday,May 28 2017]
தல அஜித் நடித்துள்ள 'விவேகம்' படத்தின் ஒளிப்பதிவாளர் வெற்றி, இதற்கு முன்னர் 'வேங்கை', 'வீரம்', 'வேதாளம்' உள்பட ஒருசில படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த ஒளிப்பதிவாளர் என்ற வகையில் தான் அனைவருக்கும் தெரியும். ஆனால் அவர் ஒரு விவசாயி, விவசாயிகளுக்காக போராடுவதற்கு என்றே ஒரு அமைப்பை நடத்தி வருகிறார் என்பது பலரும் அறியாத உண்மை.
ஆம், ஒளிப்பதிவாளர் வெற்றி 'ஏர்முனை' என்ற அமைப்பை நடத்தி வருகிறார். இதன் மூலம் விவசாயம் மீது பற்றுள்ள இளைஞர்களை ஒன்றிணைத்து விவசாயிகளுக்கு ஆதரவாக போராட்டம் நடத்துவதுதான் இவரது முதல் வேலை, அப்புறம் தான் சினிமா என்கிறார்.
பல்கேரியா முதல் பல நாடுகளில் 'விவேகம்' படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொண்டுவிட்டு, அடுத்த படம் எது என்று யோசிக்காமல், நேராக தனது சொந்த ஊரான பல்லடம் சென்று விவசாயிகள் போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளார். கொங்கு வட்டார விவசாயிகளுக்கு மிக முக்கிய தலைவராக திகழ்ந்த என்.எஸ்.பழனிச்சாமி அவர்களின் மகன் தான் வெற்றி என்பதால் அவர் அந்த பகுதியில் உள்ள அனைத்து விவசாயிகளுக்கும் நல்ல அறிமுகம். தந்தை இறந்தவுடன் விவசாயிகளுக்கு ஒரு நல்ல வழிகாட்டியாக இருந்து அவர்களுடைய உரிமைகளை பெற்றுத்தரும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்.
மேலும் தனது சேவையை தனது சொந்த ஊரோடு நிறுத்தி கொள்ளாமல் தமிழகம் முழுவதும் விவசாயம் மீது பற்றுள்ள, விவசாய குடும்பத்தை சேர்ந்த இளைஞர்களை ஒன்றிணைத்து தனது 'ஏர்முனை' சேவையை தமிழகம் முழுவதும் விரிவுபடுத்த வேண்டும் என்பதே இவரது நோக்கமாம். விவசாயிகளுக்காக போராடுவதாக ஊடகங்களுக்கு போஸ் கொடுத்து விளம்பரம் தேடிக்கொள்பவர்கள் மத்தியில் உண்மையாகவே, விவேகத்துடன் விவசாயிகளுக்காக குரல் கொடுத்து வரும் இந்த 'விவேகம்' வெற்றி அவர்களுக்கு வெற்றிகள் குவிய நமது வாழ்த்துக்கள்.