சூரியனில் இருந்து வெளிவரும் வைட்டமின் D கொரோனா உயிரிழப்பை குறைக்கிறது!!! புதிய ஆய்வு!!!
- IndiaGlitz, [Wednesday,May 06 2020]
வைட்டமின் D குறைபாடு அதிகமுள்ள நாடுகளில் கொரோனா உயிரிழப்பு அதிகமாக இருப்பதாக ஒரு புதிய ஆய்வு ஒன்று வெளியிடப் பட்டுள்ளது. கொரோனா பாதிப்பினால் ஏற்படும் உயிரிழப்பைத் தடுப்பதில் சூரியனில் இருந்து வெளிப்படும் வைட்டமின் D முக்கியப் பங்கு வகிப்பதாகக் கூறப்படுகிறது. இங்கிலாந்தில் உள்ள ராணி எலிசபெத் மருத்துவமனையின் அறக்கட்டளை மற்றும் கிழக்கு ஆங்கிலியா பல்கலைக்கழக விஞ்ஞானிகள் மேற்கொண்ட ஆய்வில் கொரோனா இறப்பு விகிதங்களுடன் வைட்டமின் D குறைந்த அளவு தொடர்பு கொண்டிருப்பதாக கூறப்படுகிறது.
கொரோனா வைரஸின் தன்மையைப் புரிந்துகொள்வதற்கு பல ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ள இந்தத் தருணத்தில் வைட்டமின் D பற்றிய தகவல்கள் வெளிவந்திருக்கிறது. பல நோய்கள் வாழ்க்கை சூழல்களினால் உண்டாகிறது என்பதற்கு இதுவும் ஒரு சிறந்த எடுத்துக்காட்டாக இருக்கலாம் எனவும் விஞ்ஞானிகள் கூறுகின்றனர். இதன்படி 20 ஐரோப்பிய நாட்டு குடிமக்களிடையே அவர்களின் வைட்டமின் D சராசரி அளவை எடுத்துக்கொண்டு அவற்றை கொரோனா வைரஸ் இறப்புகளுடன் விஞ்ஞானிகள் ஒப்பீட்டு பார்த்தனர்.
அந்த புள்ளிவிவரங்களின் படி வைட்டமின் D அதிகமாக உள்ள நாடுகளில் கொரோனா நோயினால் ஏற்படும் உயிரிழப்பு குறைந்து காணப்படுகிறது எனத் தெரிய வந்துள்ளது. அதிக உயிரிழப்புகள் கொண்ட நாடுகளில் வைட்டமின் D குறைபாடு இருப்பதாக இந்த ஆய்வு கூறுகிறது. இதற்கு முன்னதாக காசநோய், இன்ஃப்ளூயன்ஸா நோய்க்கு எதிரகாவும் வைட்டமின் D ஒரு வலுவான காரணியாக இருந்தது என விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
வைட்டமின் D என்பது கொழுப்புகள் கரையக்கூடிய கலவை. இது காளான்கள் அல்லது மீன் போன்ற உணவுகளிலிருந்து பெறமுடியும் அல்லது புறஊதா கதிர் வெளிப்படும்போது நமது தோல் இந்த வைட்டமின் D யை உற்பத்திச் செய்துகொள்ளும். நமது எலும்புகளில் உள்ள கால்சியம் அளவை பராமரிப்பதில் இது பெரும்பங்கு வகிக்கிறது. குறைந்தது 90 விழுக்காடு வைட்டமின் D யை நமது உடலானது சூரிய ஒளியில் இருந்தே பெறுகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
கொரோனா பற்றிய தெளிவுகளுக்கு வைட்டமின் D பற்றிய தகவல்கள் பெரும் உதவியாக இருக்கும் எனவும் ஆய்வை மேற்கொண்ட விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். ஆனால், வைட்டமின் D பொதுவாக அனைத்து நோய்களுக்கும் எதிராகச் செயலாற்றும் ஒரு கூறு. கொரோனா விஷயத்தில் இதைப்பற்றிய மேலதிகமான ஆதாரங்கள் தேவைப்படுகின்றன என்ற சில விஞ்ஞானிகள் தற்போது சந்தேகத்தை எழுப்பியுள்ளனர்.