'விஸ்வாசம்' திரைவிமர்சனம் - தூக்குதுரையின் அலப்பரை
ஒன்றரை வருடம் கழித்து வரும் அஜித் படம், அஜித்-சிவா கூட்டணியில் நான்காவது படம், நீண்ட இடைவெளிக்கு பின் அஜித்துடன் இணைந்த லேடி சூப்பர் ஸ்டார், ஃபர்ஸ்ட்லுக் முதல் டிரைலர் வரை மாஸ் காட்டிய படம் என்ற எதிர்பார்ப்பின் உச்சத்தில் இருந்த 'விஸ்வாசம்' திரைப்படம் இன்று வெளியாகியுள்ளது. அஜித் ரசிகர்களின் எதிர்பார்ப்பை இயக்குனர் சிவா பூர்த்தி செய்தாரா? என்பதை தற்போது பார்ப்போம்.
தேனி மாவட்டம் கொடுவிளார்ப்பட்டியின் மாஸ் நபர் தூக்குதுரை (அஜித்). இவரை மீறி அந்த கிராமத்தின் சுற்றுவட்டாரத்தில் எதுவும் நடக்காது. இந்த ஊருக்கு மும்பையில் இருந்து மெடிக்கல் கேம்ப் நடத்த வரும் நிரஞ்சனா (நயன்தாரா), தூக்குதுரையுடன் முதலில் மோதினாலும் பின் அவருடைய சில நடவடிக்கைகளை பார்த்து காதல் கொள்கிறார். திருமணம் முடிந்து குழந்தை பிறந்த பின்னர் ஒரு முக்கியமான கருத்துவேறுபாடு காரணமாக இருவரும் பிரிகின்றனர். இந்த நிலையில் பத்து வருடம் கழித்து மீண்டும் நிரஞ்சனாவை சந்திக்கும் தூக்குதுரை, தனது மகளுக்கு ஒரு ஆபத்து இருப்பதை உணர்கிறார். அந்த ஆபத்து என்ன? அந்த ஆபத்தின் பின்புலத்தில் இருப்பவர் யார்? மகளை காப்பாற்ற தூக்குதுரை எடுத்த நடவடிக்கைகள் என்ன? பிரிந்த தூக்குதுரையும் நிரஞ்சனாவும் மீண்டும் இணைந்தார்களா? என்பதே இந்த படத்தின் மீதிக்கதை.
அடாவடி, அலப்பரை, அட்டகாசத்துடன் அறிமுகமாகும் இளமையான மற்றும் அமைதியான, அழுத்தமான வில்லனுக்கு சவால்விட்டு மகள் மீது பாசத்தை பொழியும் நடுத்தர வயது என இரண்டு கெட்டப்புகளில் அஜித் மாஸ் காட்டியுள்ளார். நயனுடன் ரொமான்ஸ், ரோபோ சங்கர், தம்பி ராமையாவுடன் காமெடி, மகள் மீது பாசம், வில்லனிடம் விடும் சவால் என அஜித் தனது ரசிகர்களை திருப்தி செய்யும் அனைத்து முயற்சிகளையும் குறைவில்லாமல் எடுத்துள்ளார்.
முதல் பாதியில் டாக்டர், இரண்டாம் பாதியில் தொழிலதிபர் என நிரஞ்சனா கேரக்டரில் நயன்தாரா நடிப்பில் வழக்கம்போல் மெருகேறியுள்ளது. குறிப்பாக முதல் பாதியில் அஜித்துடன் ரொமான்ஸ், அஜித்தை பிரிவதற்காக கூறும் அழுத்தமான காரணம் ஆகியவற்றில் அவரது நடிப்பு சூப்பர். இரண்டாம் பாதியில் ஒரு கண்டிப்புள்ள அம்மாவாக மட்டுமே வருவதால் அவரது நடிப்பிற்கு ஏற்ற தீனி இல்லை.
முதல் பாதியின் கலகலப்பிற்கு ரோபோ சங்கர், யோகிபாபு தம்பி ராமையா ஆகியோர்களும், இரண்டாம் பாதியில் விவேக்கும் வந்து ரசிகர்களை சிரிக்க வைக்கின்றனர். குறிப்பாக அஜித்துக்கு மொழி பெயர்த்து கொடுக்கும் ரோபோ சங்கரின் காட்சிகள் நல்ல கலகலப்பு. கோவை சரளா அவ்வப்போது வந்து சிரிப்பை வரவழைக்க முயற்சி செய்கிறார்.
ஜெகபதிபாபுவின் வில்லத்தன நடிப்பில் எந்தவித புதுமையும் இல்லை. அவரது கேரக்டரும் அழுத்தமாக இல்லை என்பதால் அவரது நடிப்பு மனதில் பதிய மறுக்கின்றது.
டி.இமானின் இசையில் ஏற்கனவே அனைத்து பாடல்களும் சூப்பர் ஹிட். படமாக்கப்பட்ட விதமும் ஓகே. குறிப்பாக அடிச்சு தூக்கு பாடலிலும் வேட்டி கட்டு பாடலிலும் அஜித்தை நன்றாக ஆட வைத்துள்ளனர். 'கண்ணான கண்னே' பாடலும், 'வானே வானே' பாடலும் இனிமை. அதேபோல் மாஸ் காட்சிகளுக்கான பின்னணி இசையிலும் இமான் அசத்தியுள்ளார்.
வெற்றியின் ஒளிப்பதிவு, ரூபனின் படத்தொகுப்பில் எந்தவித குறையும் இல்லை. திலிப் சுப்பராயனின் ஸ்டண்ட் காட்சிகள் மாஸ் ஆக உள்ளது. குறிப்பாக இடைவேளையின்போது வரும் மழை சண்டை, ஆக்சன் பிரியர்களுக்கு சரியான விருந்து
அஜித் போன்ற நடிகரை வைத்து ஒரு மாஸ் படம் கொடுக்க வேண்டிய இயக்குனர் சிவா, இந்த முறை சற்று சறுக்கியதாகவே தெரிகிறது. முதல் பாதி முழுவதும் கதையை சொல்லாமல் காமெடி காட்சிகளால் நிரப்பிவிட்டு இடைவேளையின்போது தான் பார்வையாளர்களை நிமிர வைக்கின்றார். அதன்பின் இரண்டாம் பாதியிலும் அழுத்தமான வில்லன் கேரக்டர் இல்லாததால் ஹீரோயிசத்துக்கு முக்கியத்துவம் இன்றி படம் விறுவிறுப்பின்றி நகர்கிறது. வீரம் மற்றும் வேதாளம் பார்முலாவில் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளதால் பல காட்சிகள் ஏற்கனவே பார்த்த காட்சி போல் தெரிகிறது.
இருப்பினும் அஜித் ரசிகர்களை திருப்தி செய்யும் காட்சிகளை வைக்க இயக்குனர் தவறவில்லை. அதேபோல் 'குழந்தைகளை அவர்கள் இஷ்டத்திற்கு வளர விடுங்கள். நம்முடைய ஏமாற்றத்தையும் அனுபவத்தையும் குழந்தைகள் மீது திணிக்க வேண்டாம்' என்ற ஒரு நல்ல மெசேஜை சொல்வதிலும் இயக்குனர் நிமிர்ந்து நிற்கின்றார்.
மொத்தத்தில் அஜித்தை வைத்து சிக்ஸர் அடிக்கும் வாய்ப்பு கிடைத்தும் பவுண்டரி மட்டுமே அடித்து ரசிகர்களை மட்டும் திருப்தி செய்துள்ளார் இயக்குனர் சிவா.
Comments