எனது மாநிலம் மீண்டும் எழுச்சி பெற்றுள்ளது. விஸ்வநாதன் ஆனந்த்
- IndiaGlitz, [Thursday,January 19 2017]
சென்னை மெரீனா கடற்கரை உள்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் ஜல்லிக்கட்டுக்காக இளைஞர்களின் எழுச்சி போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த போராட்டத்திற்கு மாணவர்கள், ஐடி ஊழியர்கள், அரசு ஊழியர்கள், வணிகர்கள், திரையுலகினர் உள்பட பல்வேறு தரப்பினர் ஆதரவு கொடுத்து வருகின்றனர்.
இந்நிலையில் சென்னையை சேர்ந்த செஸ் விளையாட்டு வீரர் விஸ்வநாதன் ஆனந்த் தனது சமூக வலைத்தளத்தில் இந்த போராட்டத்திற்கு ஆதரவு அளித்துள்ளார். மீண்டும் எனது மாநிலம் எழுச்சி பெற்றது குறித்து பெருமைப்படுவதாக அவர் கூறியுள்ளார்.
விஸ்வநாதன் ஆனந்த் தனது சமூக வலைத்தளத்தில் மேலும் கூறியதாவது: ஜல்லிக்கட்டு என்பது எங்களது கலாச்சார அடையாளம். அதற்கு மரியாதை தர வேண்டும்.விலங்குகளை கொடுமைப்படுத்த கூடாது என்பதில் எனக்கும் உடன்பாடு உண்டு. ஆனால் ஜல்லிக்கட்டு என்பது விலங்குகளை கொடுமைப்படுத்துவது அல்ல. அது எங்கள் பாரம்பரியம் மற்றும் வாழ்வாதாரம்.
"எனது மாநிலம் மீண்டும் எழுச்சி பெற்றுள்ளது. ஒற்றுமையாக, அமைதியாக. தமிழன் என்பதில் பெருமை கொள்கிறேன். அடுத்த தலைமுறையினர் நவீனமாகவும் அதே சமயம் கலாச்சார வேர்களை விடாதவர்களாகவும் இருக்கின்றார்கள்' இவ்வாறு அவர் கூறியுள்ளார்.