'விஸ்வரூபம் 2' கமல்ஹாசனின் ஒன்மேன் ஷோ
கமல்ஹாசன் இயக்கி நடித்த 'விஸ்வரூபம்' என்ற வெற்றி படத்தின் இரண்டாம் பாகமாக இன்று 'விஸ்வரூபம் 2' வெளிவந்துள்ளது. முதல் பாகத்தின் மிகப்பெரிய வெற்றி, இரண்டாம் பாகத்தின் பிரமாதமான புரமோஷன் ஆகியவை இந்த படத்தின் எதிர்பார்ப்பை எகிற செய்திருந்த நிலையில் இந்த படத்தின் விமர்சனத்தை தற்போது பார்ப்போம்
ரா உளவாளியான விஸ்வநாதன் என்ற வாசிம் அகமதுக்கும் (கமல்ஹாசன்) தீவிரவாத தலைவனான உமருக்கும் (ராகுல் போஸ்) இடையே நடக்கும் போர் தான் விஸ்வரூபம்' படத்தின் முதல் பாகம் என்பது தெரிந்ததே. முதல் பாகத்தில் அமெரிக்காவில் இருந்து தப்பி செல்லும் உமர், பிரிட்டன் தலைநகர் லண்டனை அழிக்க மிகப்பெரிய திட்டம் போடுகிறார். அந்த திட்டத்தை வாசிம் அகமது எப்படி முறியடிக்கின்றார் என்பதுதான் கதை
கமல்ஹாசன் ஒரு சினிமா பல்கலைகழகம் என்பது அனைவரும் அறிந்ததே. நடிப்பு, நடனம், இயக்கம், என அவர் இந்த படத்தின் ஒவ்வொரு செங்கலிலும் இருக்கின்றார். அனந்த் மகாதேவனிடம் பேசும் குத்தலான வசனங்கள், பூஜாவுடன் ரொமான்ஸ், ஆண்ட்ரியாவுக்கு ஒரு குருவாக, சேகர் கபூரின் கீழ் பணிபுரியும் ஒரு அதிகாரியாக என படம் முழுவதும் நடிப்பில் அசத்தும் கமல்ஹாசன், தனது அம்மாவை பார்க்கும் காட்சிகளில் கண்களை குளமாக்குகிறார். அதிலும் அவரது அம்மா, கமலை பார்த்து 'யார் இவர்' என்று கேட்கும்போது உள்ளுக்குள் உடைந்து அதை வெளியே மறைத்து நடிக்கும் காட்சியில் அனேகமாக உலகில் எந்த நடிகராலும் தர முடியாத நடிப்பு. அதேபோல் நீண்ட இடைவெளிக்கு பின்னர் கமல் படத்தில் ஒரு நீளமான அம்மா செண்டிமெண்ட் காட்சி. மேலும் தீவிரவாதியின் தலைவனாக இருந்தாலும் அவனுடைய குடும்பத்தையும் காப்பா|ற்றி அவன் கண்முன்னே நிறுத்தி, அந்த தீவிரவாதியின் கண்களிலும் ஈரம் இருப்பதை பார்வையாளர்களுக்கு வசனமே இல்லாமல் புரிய வைக்கும் காட்சி நமக்கு தெரிந்து இதுவரை உலகில் எந்த படத்திலும் வந்ததில்லை.
அரசியல்வாதிங்க நேர்மையா சமரசம் பேசுனாலே தீவிரவாதம் ஒழிஞ்சிடும்',
எதிரியை எப்பவும் முட்டாளா நான் நினைக்கறதில்ல',
என்னை ஆர்மில தேர்ந்தெடுத்ததுக்கு எங்க அப்பாவோட பூர்விகம் தான் காரணம்
ஆகிய பஞ்ச் வசனங்களை எந்தவித ஆர்ப்பாட்டம், பாடி லேங்க்வேஜ் இல்லாமல் கண்களை கூர்மையாக வைத்து கொண்டு கமல் பேசும் காட்சிகளை பார்த்து கொண்டே இருக்கலாம். அதேபோல் லிப்கிஸ், படுக்கையறை காட்சிகள் இல்லாத கமல் படமாக இந்த படம் இருந்திரக்கூடாது என்பதிலும் கவனம் செலுத்தியுள்ளர்.
நடிகர் கமல்ஹாசனுக்கு எந்த விதத்திலும் சளைக்காத இயக்குனர் கமல்ஹாசன் ஒவ்வொரு பிரேமிலும் தெரிகிறார். படத்தின் ஆரம்பத்தில் வரும் கார் காட்சி, ஆப்கானிஸ்தான் தீவிரவாத முகாம்களை அழிக்கும் காட்சிகள், உமரிடம் இருந்து கமல் தப்பிக்கும் காட்சி, கிளைமாக்ஸ் ஆக்சன் காட்சிகளில் கமல் உள்பட படக்குழுவினர் அபாரமான உழைப்பு தெரிகிறது.
பூஜாகுமார், ஆண்ட்ரியா ஆகிய இருவரையும் மிகச்சரியாக பயன்படுத்தியுள்ளார் இயக்குனர் கமல். அவ்வப்போது பூஜாகுமாரை ஆண்ட்ரியா கலாய்க்கும் காட்சிகள் இருந்தாலும் 'உன் அளவு இல்லைன்னாலும் நானும் 4 எழுத்து படிச்சிருக்கேன்' என்று பூஜா சொல்ல, அதற்கு ஆண்ட்ரியா பி.எச்.டி. மூன்று எழுத்துதானே, நீங்க நான்கு எழுத்துன்னு சொல்றீங்க என்று சொல்வது நல்ல பதிலடி
ரா அமைப்பின் உயரதிகாரியாக சேகர் கபூரும், உயரதிகாரியாக இருந்து கொண்டு தேசத்துரோகம் செய்யும் கேரக்டரில் அனந்த் மகாதேவனும் தங்களுக்கு கொடுத்த கதாபாத்திரங்களை சரியாக செய்துளனர். ராகுல் போஸின் வில்லத்தனமான நடிப்பு முதல் பாகத்தை விட இந்த இரண்டாம் பாகத்தில் வியப்படைய செய்கிறது. 'பொம்பள மாதிரி பேசாதே, பொம்பளைகிட்ட அதிகம் பேசாதே, பயம் இருந்த பர்தா போட்டுகிட்டுபோ' என்ற வசனத்தை கமலிடம் கூறுவதும் அதற்கு கமல் கண்ணால் பேசும் செய்கையும் எத்தனை பேருக்கு புரிந்ததோ தெரியவில்லை
ஜிப்ரானின் இசை இந்த படத்திற்கு மிகப்பெரிய பலம். குறிப்பாக நானாகிய நதிமூலம் பாடலும் அந்த பாடால் படமாக்கப்பட்ட விதமும் கவிதை. பின்னணி இசை ஒரு ஹாலிவுட் படத்திற்குரிய தரம் என்றால் அது மிகையாகாது.
சானு வர்கீஸ் கேமிரா, மகேஷ் நாராயணன், விஜய் சங்கரின் படத்தொகுப்பை விவரிக்க வார்த்தைகளே இல்லை.
கமல் ஒரு மிகப்பெரிய அறிவுஜீவி என்பது தெரிந்ததே. அவருடைய அளவுக்கு பார்வையாளர்கள் யோசித்து இந்த படத்தை புரிந்து கொள்வார்களா? என்ற ஒரே ஒரு குறையை தவிர இந்த படத்தில் வேறு குறையை பார்க்க முடியவில்லை. விமர்சகர்கள் சரியான விமர்சனத்தின் மூலம் இந்த படத்தை மக்களுக்கு கொண்டு சென்றால் இந்த படம் வசூல் ரீதிய்லும் வெற்றி பெற வாய்ப்பு உள்ளது.
மொத்தத்தில் 'விஸ்வரூபம் 2', ஹாலிவுட் திரையுலகினர் கோலிவுட்டை பார்த்து வியக்கும் காலம் நெருங்கிவிட்டது.
Comments