கடவுள் தான் இந்த நாட்டை காப்பாற்ற வேண்டும்: விஷ்ணு விஷால்

புல்வாமா தாக்குதல், இந்தியாவின் பதிலடி, பாகிஸ்தான் ராணுவத்தினர்களால் அபிநந்தன் கைது, இந்தியாவின் ராஜதந்திரத்தால் இன்று அபிநந்தன் விடுதலை என கடந்த சில நாட்களாக இந்தியா பாகிஸ்தான் இடையே ஒரு பதட்டமான சூழல் ஏற்பட்டுள்ளது

இந்த நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன் பாகிஸ்தான் ராணுவத்தினர்களால் கைது செய்யப்பட்ட இந்திய ராணுவ வீரர் அபிநந்தனிடம் பாகிஸ்தான் வீரர்கள் பல கேள்விகளை அடுக்கடுக்காக கேட்டுள்ளனர். அவற்றில் 'இந்தியாவில் எந்த இடத்தில் இருந்து வருகிறீர்கள்?, நீங்கள் பறந்த வந்த விமானம் எத்தகையது? உங்கள் தாக்குதல் திட்டம் என்ன? போன்ற கேள்விகளை கேட்டுள்ளனர். ஆனால் இந்த கேள்விகள் எதற்குமே அபிநந்தன் பதில் சொல்லவில்லை. ஐயாம் சாரி, இந்த கேள்விகளுக்கு நான் பதில் சொல்ல முடியாது என்று கூறியுள்ளார்.

ஆனால் இந்த கேள்விகளுக்கு இந்திய ஊடக நபர்களும், சமூக வலைத்தள பயனாளிகளும் தெள்ளத்தெளிவாக தங்கள் ஊடகங்களிலும், சமூக வலைத்தள பதிவுகளிலும் பதிலளித்துள்ளனர். அபிந்தந்தனிடம் இருந்து கேட்டு பெற வேண்டிய அனைத்து விஷயங்களையும் பாகிஸ்தான் ராணுவம் எந்தவித சிரமமும் இன்றி மிக எளிதாக ஊடகங்களில் இருந்து பெற்றுவிட்டது.

இதுகுறித்து நடிகர் விஷ்ணுவிஷால் தனது சமூக வலைத்தள பக்கத்தில் இந்தியாவை ஊடகங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் இருந்து கடவுள்தான் காப்பாற்ற வேண்டும் என்று பதிவு செய்துள்ளார்.