பிறமொழி படங்களுக்கும் செக் வைப்பாரா விஷால்?
- IndiaGlitz, [Saturday,March 31 2018]
தமிழ் திரையுலகில் முன் எப்போதும் இல்லாத அளவிற்கு ஒற்றுமையுடன் கடந்த ஒரு மாதமாக வேலைநிறுத்தம் நடந்து வருகிறது. இந்த வேலைநிறுத்தத்தால் பெரிய தயாரிப்பாளர்கள் முதல் கடைநிலை ஊழியர்கள் வரை பாதிப்பு தான் என்றாலும் காலங்காலமாக இருந்து வரும் பிரச்சனைகளுக்கு முடிவு கட்ட வேண்டும் என்ற ஒரே வைராக்கியத்தோடு அனைவரும் இந்த வேலைநிறுத்தத்திற்கு ஆதரவு கொடுத்து வருகின்றனர்.
இந்த நிலையில் இந்த வேலைநிறுத்தத்தால் திரையரங்கு உரிமையாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த ஒரு மாதமாக எந்த புதிய திரைப்படமும் வெளிவராததால் ஹவுஸ்புல் என்ற போர்டையே ஒரு தியேட்டரிலும் பார்க்க முடியவில்லை. ஒருசில தியேட்டர்களில் 50 பேர், 100 பேர்களுடன் படம் ஓடி வருகிறது.
இந்த நிலையில்தான் பிரபல தெலுங்கு ஹீரோக்கள் நடித்து வெளியாகும் புதிய படங்களை தமிழகத்தில் ரிலீஸ் செய்ய தியேட்டர் அதிபர்கள் முடிவு செய்துள்ளனர். நேற்று வெளியான ராம்சரண்தேஜா, சமந்தா நடித்த 'ரங்கஸ்தாலம்' திரைப்படம் சென்னை உள்பட தமிழகத்தின் பெரும்பாலான திரையரங்குகளில் வெளியாகி நீண்ட நாட்களுக்கு பின்னர் திரையரங்குகளில் நல்ல வசூல் கிடைத்துள்ளது. இப்படியே போனால் புதிய தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி மற்றும் ஆங்கில படங்களை திரையரங்குகள் ரிலீஸ் செய்தால் வேலைநிறுத்த போராட்டத்திற்கு அர்த்தமே இல்லாமல் போய்விடும் நிலை ஏற்பட்டுவிடும் என கூறப்படுகிறது.
இந்த நிலையில் தெலுங்கு உள்பட பிறமொழி படங்களை தமிழகத்தில் ரிலீஸ் செய்வதை தள்ளி வைக்க வேண்டும் என்ற அந்தந்த மாநில நிர்வாகிகளிடம் விஷால் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று திரையுலகினர் கேட்டுக்கொண்டுள்ளனர். விஷால் இதற்கும் செக் வைப்பாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்