திருட்டு இணையதளத்திற்கு விஷால் நேரடி சவால்
- IndiaGlitz, [Friday,March 10 2017]
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தேர்தல் வரும் ஏப்ரல் 2ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில் இந்த தேர்தலில் 5 அணிகள் போட்டியிடுகின்றன. அவற்றில் ஒன்றுதான் விஷால் தலைமையிலான அணி. நடிகர் சங்கம் போலவே தயாரிப்பாளர் சங்கத்திலும் பல நடவடிக்கைகள் எடுத்து அனைத்து தயாரிப்பாளர்களையும் காப்பாற்றுவோம் என்று விஷால் அணியினர் வாக்குறுதி கொடுத்துள்ளனர்.
இந்நிலையில் புதிய படங்களை வெளியாகும் தினத்தன்றே இணையதளத்தில் வெளியிடும் ஒரு திருட்டு இணையதளத்திற்கு விஷால் நேரடி சவால் ஒன்றை விடுத்துள்ளார். பரத், பிரேம்ஜி நடித்த 'சிம்பா' என்ற படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட விஷால் இந்த சவாலை அந்த திருட்டு இணையதளத்திற்கு விடுத்துள்ளார். இந்த விழாவில் விஷால் கூறியதாவது:
தடைகளை தாண்டி ரிலீஸ் ஆகுற எந்த படமும் கண்டிப்பா வெற்றி பெரும். இந்த படம் சம்மருக்கு வரும் என்று டிரைலரில் கூறியுள்ளார்கள். அப்படியென்றால் தயாரிப்பாளர் சங்கத் தேர்தல் முடிந்த பின்னர்தான் இந்த படம் வரும். அந்த சமயத்துல இந்த படம் எந்த இணையதளத்திலும் டிவிடியிலும் வராதுன்னு என்பதை நான் இப்பவே உறுதி கூறுகின்றேன். அந்த வெப்சைட்டோட பேரை நான் சொல்லல. சொன்னா அவங்களுக்கு தான் பப்ளிசிட்டி. ஏப்ரல் 2க்கு அப்பறம் நீயா நானானுக்கு பாத்துக்கலாம்.
அதுமட்டுமின்றி இந்த படத்துக்கு நல்ல ஒரு ரிலீஸ் டேட் கிடைக்கணும். இந்த படத்தின் தயாரிப்பாளர் இன்னொரு படம் எடுக்க வேண்டும். ஏதோ வந்தோம், ஒரு படத்தை தயாரித்தோம், வந்த காசை எவனோ ஆட்டைய போட்டுட்டான் என்று இல்லாமல் இந்த படத்தின் தயாரிப்பாளர் நிச்சயம் லாபம் பெற்று இன்னொரு படம் தயாரிக்க வேண்டும். இவர் மட்டுமின்றி அனைத்து தயாரிப்பாளர்களும் தொடர்ந்து படம் எடுக்க வேண்டும். அதற்குரிய வழிவகைகளை செய்வோம்' என்று விஷால் பேசினார்.