நெடுவாசல் திட்டம் ரத்து: போராட்டக்காரர்களுக்கு விஷால் வாழ்த்து

  • IndiaGlitz, [Thursday,May 10 2018]

விவசாய நிலங்கள் அடங்கிய புதுக்கோட்டை மாவட்ட நெடுவாசலில் ஹைட்ரோகார்பன் திட்டத்தை மத்திய அரசு ஆரம்பிக்கும் முயற்சிக்கு அந்த பகுதி மக்கள் மட்டுமின்றி தமிழகம் முழுவதிலும் இருந்து எதிர்ப்புக்குரல் வெளிப்பட்டது. அதுமட்டுமின்றி திரையுலகை சேர்ந்தவர்களும் தங்கள் சமூக வலைத்தளங்களிலும் நேரிலும், சமூக வலைத்தளங்கள் மூலமும் நெடுவாசல் திட்டத்திற்கு எதிரான போராட்டத்திற்கு ஆதரவு கொடுத்தனர். மேலும் ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு தடை கோரி பசுமை தீர்ப்பாயத்தில் விஷால் தனது தேவி அறக்கட்டளை மூலம் வழக்கு தொடர்ந்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் எடுப்பதற்கு அனுமதி பெற்றிருந்த கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த ஜெம் நிறுவனம், நெடுவாசலில் இந்த திட்டத்தை கைவிடுவதாகவும், நெடுவாசலுக்கு பதில் வேறு இடம் ஒதுக்குமாறும் மத்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளது.

இந்த செய்தி  இந்த திட்டத்திற்கு எதிராக  வழக்கு தொடர்ந்த விஷாலுக்கு மகிழ்ச்சியை அளித்துள்ளது. அவர் இதுகுறித்து தனது சமூக வலைத்தளத்தில் கூறியதாவது: 

நெடுவாசலில் ஹைட்ரோகார்பன் திட்டத்தை ஜெம் லேப்ஸ் நிறுவனம் கைவிட உள்ளதாக நம்பத் தகுந்த வட்டாரங்களில் இருந்து வெளிவந்துள்ள தகவல் மகிழ்ச்சியை தருகிறது.

இந்த திட்டத்தை நிறுத்த போராடிய அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள். ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு எதிராக வழக்கு தொடர்ந்தவன் என்ற முறையில், நான் மிகுந்த மகிழ்ச்சியடைந்துள்ளேன் என்று விஷால் கூறியுள்ளார்.