தயாரிப்பாளர் சங்க தேர்தலில் விஷால். சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு
- IndiaGlitz, [Tuesday,February 21 2017]
நடிகர் சங்க செயலாளராக இருக்கும் நடிகர் விஷால் தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவர் பதவிக்கு போட்டியிட கடந்த சில நாட்களுக்கு முன்னர் விண்ணப்பம் செய்தார். இந்த விண்ணப்பத்தை உலக நாயகன் கமல்ஹாசன் முன்மொழிந்திருந்தார் என்பதை ஏற்கனவே பார்த்தோம்.
இந்நிலையில் விஷாலின் வேட்பு மனுவிற்கு எதிராக தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகள் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர். ஏற்கனவே நடிகர் சங்கத்தில் செயலாளராக இருக்கும் விஷால், தயாரிப்பாளர் சங்கத்தின் பதவிக்கு போட்டியிட தகுதி இல்லை என்று உத்தரவிடுமாறு அந்த மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த மனு இன்று சென்னை ஐகோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுவை விசாரித்த நீதிமன்றம், 'தயாரிப்பாளர் சங்க தலைவர் பதவிக்கு போட்டியிட நடிகர் விஷாலுக்கு தடையில்லை என்றும், நடிகர் சங்கத்தை சேர்ந்த விஷாலின் மனுவை தேர்தல் அதிகாரி ஏற்றது சரியானதே' என்றும் சென்னை ஐகோர்ட் தனது உத்தரவில் தெரிவித்துள்ளது.
இந்த உத்தரவின்படி நடிகர் விஷால் தயாரிப்பாளர் சங்க தேர்தலில் போட்டியிடுவது உறுதியாகியுள்ளது.