சொன்னதை செய்ய ஆரம்பித்துவிட்டார் விஷால்! வாழ்த்துக்கள்

  • IndiaGlitz, [Tuesday,May 02 2017]

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்டு வெற்றி பெற்றவுடன் விஷால் அளித்த வாக்குறுதிகளில் ஒன்று புதிய மற்றும் சின்ன பட்ஜெட் தயாரிப்பாளர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்வோம் என்பது தான்.

அரசியல்வாதிகள் போல் தேர்தல் நேரத்தில் வாக்கு கொடுத்துவிட்டு வெற்றி பெற்றவுடன் வாக்குறுதிகளை காற்றில் பறக்கவிடாமல் சொன்னதை நிறைவேற்றும் குணம் கொண்டவர் விஷால் என்பது நடிகர் சங்கத்தில் ஏற்பட்ட பல மாற்றங்களில் இருந்து புரிந்து கொள்ள முடிகிறது. அந்தவகையில் தற்போது தயாரிப்பாளர் சங்கத்திலும் சொன்னதை செய்ய ஆரம்பித்துவிட்டார் விஷால்.

சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற திரைப்படம் '8 தோட்டாக்கள்'. ரூ.4 கோடி முதலீட்டில் உருவான இந்த படம் நல்ல வசூலை அள்ளினாலும் விநியோகிஸ்தர்கள் லாபம் போக தயாரிப்பாளர் கைக்கு வந்த லாபம் சுமார் ஐம்பது லட்ச ரூபாய் தானாம். இதுகுறித்து அந்த படத்தின் தயாரிப்பாளர் விஷாலிடம் முறையிட, விஷால் கேபிளில் இந்த படத்தை ஒரே ஒரு முறை ஒளிபரப்பும் உரிமையை ரூ.45 லட்சத்திற்கு விற்று கொடுத்து தயாரிப்பாளருக்கு உதவி செய்துள்ளார். தமிழகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியிட்டதால் கிடைத்த லாபத்தை ஒரே ஒருமுறை கேபிளில் ஒளிபரப்பும் உரிமை மூலம் பெற்றுத்தந்த விஷாலை அந்த தயாரிப்பாளர் தலையில் வைத்து கொண்டாடி வருகிறார் என்பதை சொல்லவும் வேண்டுமா?

மேலும் ஒரு குறிப்பிட்ட தொகையை கொடுத்துவிட்டு 99 வருடங்களுக்கு ஒளிபரப்பும் உரிமையை பெற்று வரும் தனியார் சாட்டிலைட் தொலைக்காட்சிகளுக்கும் விஷால் விரைவில் செக் வைப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.