ரஜினி, கமல் ஆதரவு யாருக்கு? விஷால் விளக்கம்

நடிகர் சங்க தேர்தல் ஜூன் 23ஆம் தேதி நடைபெறவிருக்கும் நிலையில் விஷாலின் பாண்டவர் அணி மற்றும் பாக்யராஜின் சுவாமி சங்கரதாஸ் அணி என இரண்டு அணிகளில் இருந்து போட்டியிடும் வேட்பாளர்களின் வேட்புமனு தாக்கல் நேற்றுடன் முடிவடைந்தது

இந்த நிலையில் இன்று காஞ்சிபுரத்தில் நடிகர் சங்க வழக்கு ஒன்றில் ஆஜரான நடிகர் சங்க செயலாளர் விஷால் பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தபோது, 'ரஜினி, கமல் ஆதரவு தனக்கு இருப்பதாக பாக்யராஜ் கூறியது குறித்த கேள்விக்கு பதிலளித்தபோது, 'ரஜினி, கமல் இருவரும் தாங்கள் யாருக்கு ஆதரவு என அதிகாரபூர்வமாக அறிவிப்பு வெளியிடும் வரை இதனை வதந்தியாகத்தான் எடுத்து கொள்ள வேண்டும் என்று தெரிவித்தார்.

மேலும் ஒவ்வொரு முறையும் தேர்தலின்போது ரஜினி, கமல் இருவரையும் சந்தித்து இதுவரை என்ன செய்தோம், இனிமேல் என்ன செய்யவிருக்கின்றோம் என்பது குறித்து தெரிவிப்பது வழக்கம். அந்த வகையில் இருவரையும் சந்திக்க திட்டமிட்டுள்ளோம்' என்று கூறினார். மேலும் நடிகர் சங்க கட்டிட விஷயத்தில் எந்தவித சட்டச்சிக்கலும் இல்லை என்றும் இந்த ஆண்டுக்குள் கண்டிப்பாக நடிகர் சங்க கட்டிடம் திறப்பு விழா நடத்தப்படும் என்றும் விஷால் கூறினார்