நயன்தாரா இஷ்டமில்லை என்று சொல்லும்போது அவரை கட்டாயப்படுத்த முடியாது: விஷால்
- IndiaGlitz, [Friday,July 28 2023]
நடிகை நயன்தாரா ஒரு திரைப்படத்தின் புரமோஷனுக்கு வர இஷ்டமில்லை என்று கூறினால் அவரை கட்டாயப்படுத்த முடியாது என்று நடிகர் விஷால் கேள்வி ஒன்றுக்கு பதில் அளித்துள்ளார்.
நடிகை நயன்தாரா அவர் நடிக்கும் எந்த திரைப்படத்தின் புரமோஷனுக்கும் வரமாட்டார் என்பதை பல ஆண்டுகளாக கடைபிடித்து வருகிறார். இந்த நிலையில் தனியார் கல்லூரி ஒன்றில் மரம் நடும் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட விஷால் இடம் இது குறித்த கேள்வி கேட்டபோது, ‘ நயன்தாரா எந்த பட புரொமோஷனிலும் கலந்து கொள்ள மாட்டார், அது அவருடைய தனிப்பட்ட உரிமை, அவர் புரமோஷன் நிகழ்ச்சியில் வந்து ஆக வேண்டும் என்று கட்டாயப்படுத்த முடியாது.
நான் நடிகர் சங்க பொதுச் செயலாளர் தான், பள்ளி தலைமை ஆசிரியர் கிடையாது. ஒருவர் தனக்கு இஷ்டமில்லை என்று சொல்லும் போது நாம் ஒன்றும் செல்ல முடியாது என்று கூறினார். ஆனால் அதே நேரத்தில் படத்தின் புரமோஷனுக்கு வந்தால் தவறு இல்லை. காரணம் ஒரு தயாரிப்பாளர் ஒரு நடிகர் நடிகைக்கு தேவையான ஊதியத்தை வழங்கும்போது அவரது படத்தை புரமோஷன் செய்வதில் தவறு கிடையாது என்று தெரிவித்தார்.
மேலும் அரசியல் குறித்த கேள்விக்கு பதில் அளித்த விஷால், ‘நான் ஏற்கனவே அரசியலுக்கு வந்து விட்டேன், அரசியலில் தான் இருக்கிறேன், அரசியல்வாதிகள் நடிகராக மாறும்போது ஒரு நடிகர் ஏன் அரசியல்வாதியாக கூடாது என்று தெரிவித்தார். ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம் என்றும் அவர் கூறினார்.