பா ரஞ்சித்தை அடுத்து திமுகவை எதிர்த்து களமிறங்குகிறாரா விஷால்.. அதிரடியாக கேட்ட ஒரு கேள்வி..!

  • IndiaGlitz, [Monday,July 22 2024]

சமீபத்தில் திமுகவை இயக்குனர் பா ரஞ்சித் கடுமையாக விமர்சனம் செய்து பேசியது பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் தற்போது திமுகவுக்கு எதிராக நடிகர் விஷாலும் பேட்டி அளித்திருப்பது மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நடிகர் விஷால் இன்று செய்தியாளர்களை சந்தித்தபோது, ஜிஎஸ்டி வரி குறித்த கேள்விக்கு பதில் அளித்தபோது ‘தமிழ்நாட்டில் மட்டும் ஏன் இரண்டு ஜிஎஸ்டி வசூலிக்கப்படுகிறது என்று தெரியவில்லை. கடந்த அரசாங்கமாக இருந்தாலும் சரி, இந்த அரசாக இருந்தாலும் சரி, அதையேதான் தொடர்ந்து செய்கிறது.

சினிமா மிகவும் கஷ்டப்படுகிறது, சினிமா துறைக்கு இந்த ஆண்டு மிகவும் கடினமான ஆண்டு. சிறிய படத்தை யாரும் வாங்க முன் வருவதில்லை. அடுத்து வரும் மாதங்களில் பல புதிய படங்கள் ரிலீஸ் ஆகின்றன. அந்த படங்களும் தீபாவளி, ஆயுத பூஜை, கிறிஸ்துமஸ் என்று பெரிய நடிகர்களே எடுத்துக் கொள்கிறார்கள். இப்படி இருந்தால் சின்ன படங்கள் எப்படி ரிலீஸ் ஆகும் என்ற கேள்வி எழுப்பினார்.

மேலும் சினிமா துறையில் அரசு தலையிடுவது குறித்த கேள்விக்கு பதிலளித்த விஷால், ‘அரசு ஏன் சினிமாவுக்குள் வரவேண்டும், கடந்த அரசு சினிமாவுக்குள் வரவே இல்லை, அரசு சினிமாவுக்கு வர வேண்டிய அவசியமும் இல்லை. அவர்கள் பொதுப்பணி துறையை கவனித்துக் கொண்டால் மட்டும் போதும். அரசுக்கு எதுக்கு சினிமாத்துறை? சினிமாத்துறை சினிமா துறையாகவே இருந்து விட்டு போகட்டும்’ என்று மறைமுகமாக திமுகவை எதிர்த்து பேசி உள்ளார்.

2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் களத்தில் இறங்குவீர்களா? என்று கேட்ட கேள்விக்கு ’நான் அரசியலில் இறங்க வேண்டுமா? இல்லையா? என்பதை மக்கள்தான் சொல்ல வேண்டும். மக்கள் முடிவு செய்து இறங்குங்கள் என்று சொன்னால் வேறு வழி இல்லை, இறங்கி தான் ஆக வேண்டும்.

மக்கள் அனைத்து வசதிகளும் பெற்று நன்றாக இருந்தால் நடிகர்கள் சினிமாவுக்கு வர வேண்டிய அவசியம் இல்லை, நாங்கள் ஏன் அரசியல்வாதியாக நினைக்கிறோம், மக்கள் கஷ்டப்படுவதால் தான் அவர்கள் குறையை தீர்க்க அரசியலுக்கு வருகிறோம்’ என்றும் தெரிவித்தார்.