போராளி என்ற வார்த்தைக்கு சொந்தமானவர் கருணாநிதி: விஷால்

  • IndiaGlitz, [Monday,July 30 2018]

திமுக தலைவர் கருணாநிதி கடந்த மூன்று நாட்களாக சென்னை காவேரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரது உடல்நிலை நேற்றிரவு தற்காலிக பின்னடைவில் இருந்ததாகவும், தற்போது சீராக இருப்பதாகவும் காவேரி மருத்துவமனை மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் கருணாநிதியின் உடல்நலம் குறித்து விசாரிக்க துணை குடியரசு தலைவர் முதல் உள்ளூர் அரசியல்வாதிகள் வரை காவேரி மருத்துவமனைக்கு வந்து கொண்டிருக்கின்றனர். பல திரையுலக பிரமுகர்களும், நடிகர், தயாரிப்பாளர் சங்கத்தின் நிர்வாகிகளும் அவரது உடல்நிலை குறித்து மருத்துவமனைக்கு சென்று அறிந்து வருகின்றனர்.

இந்த நிலையில் கருணாநிதி குறித்து நடிகர் சங்க செயலாளரும், தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவருமான விஷால் தனது சமூக வலைத்தளத்தில் ஒரு கருத்தை பதிவு செய்துள்ளார். அதில் அவர் கூறியதாவது: இந்த நிமிடத்தில் இருந்து போராளி என்ற வார்த்தை கலைஞர் கருணாநிதிக்கு சொந்தமானது. இரவில் வலுக்கட்டாயமாக கைது செய்யப்பட்டதில் இருந்து இந்த நாள்வரை அந்த வார்த்தையை அவர் கூறி வருகிறார். அவர் ஒருபோதும் தனது நம்பிக்கையை இழக்காமல் வாழ்ந்து வருகிறார். என்ன உத்வேகமான மனிதர். வாழ்க்கையின் ஒவ்வொரு விஷயத்தையும் வித்தியாசமான கோணத்தில் நீங்கள் எனக்கு வழங்கினீர்கள். அன்புள்ள தலைவரே, நான் உங்களுக்கு தலைவணங்குகிறேன் என்று கூறியுள்ளார்.,