கமல்-ரஜினி இருவரில் யாருக்கு மக்கள் வாக்களிப்பார்கள்: விஷால் கணிப்பு

  • IndiaGlitz, [Thursday,January 18 2018]

கோலிவுட்டின் இரண்டு பெரிய நடிகர்களான ரஜினி, கமல் ஆகிய இருவரும் ஒரே சமயத்தில் அதே நேரத்தில் தனித்தனியாக அரசியலில் களமிறங்குவதால் கோலிவுட் திரையுலகினர் மற்றும் பொதுமக்கள் இருவரில் யாரை ஆதரிப்பார்கள் என்ற கேள்வி எழுந்துள்ளது. இருவர் மீது பொதுமக்களும், கோலிவுட் திரையுலகினர்களும் சம மதிப்பு, மரியாதை வைத்துள்ளதால் இந்த கேள்விக்கான விடை கணிக்க முடியாத அளவில் உள்ளது.

இந்த நிலையில் இதுகுறித்து இன்று நடைபெற்ற இந்தியா டுடே குழுமத்தின் கருத்தரங்கில் பேசிய நடிகர் விஷால் கூறியதாவது: ரஜினி மற்றும் கமல் ஆகியோர் அரசியலுக்கு வருவதாக தாமதாக அறிவித்துள்ளனர். ஆனால் இந்த முடிவு மிகச்சரியான ஒன்றாகவே பார்க்க முடிகிறது. கமல் மற்றும் ரஜினி ஆகிய இருவரும் களத்தில் உள்ள நிலையில் மக்கள் யாருக்கு வாய்ப்பளிப்பார்கள் என கணிக்க முடியாத சூழல் உள்ளது. ஆனால் வரும் சட்டமன்ற தேர்தல் மிகப்பெரிய மாற்றத்தை எற்படுத்துவதாக அமைய போகிறது என்பது மட்டும் உறுதி” என்று கூறினார்.

மேலும் “பல்வேறு சமூகம் சார்ந்த பிரச்னைகள் பற்றி பேசிவரும் நடிகர் பிரகாஷ்ராஜ் தமிழகத்தில் போட்டியிட வேண்டும். அவரின் பங்களிப்பு நிறைய மாற்றங்களை ஏற்படுத்தும். ஆர்கே நகரில் எனது வேட்புமனுவை நிராகரித்து ஜனநாயக படுகொலை செய்தார்கள். ஆனால் அதுவே என்னை இன்னும் வலிமை ஆக்கியிருக்கிறது” என்று கூறினார்.