பஸ் ஸ்டிரைக்: விஷாலுக்கு ஏற்பட்ட அச்சம்
- IndiaGlitz, [Friday,January 05 2018]
நேற்று மாலை முதல் தமிழகம் முழுவதும் போக்குவரத்து ஊழியர்களின் அறிவிக்கப்படாத திடீர் வேலைநிறுத்தத்தால் பொதுமக்கள் மாணவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். மாநிலம் முழுவதும் 10% பேருந்துகள் கூட ஓடவில்லை என்பதால் மாநிலம் முழுவதும் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் சற்றுமுன்னர் கமல்ஹாசன் தனது டுவிட்டரில் 'தமிழக முதலமைச்சர், மக்கள் அனுபவிக்கும் இன்னல்களையும் போக்குவரத்துத் தொழிலாளர்களின் நியாயமான கோரிக்கைகளையும் மனதில் கொண்டு, தயவாய் பேச்சுவார்த்தை நடத்தவேண்டும். பொங்கலுக்கு அதுவே அரசுதரும் விலைமதிப்பிலா பரிசாகும்' என்று கூறியிருந்தார்.
இந்த நிலையில் கமல்ஹாசனை அடுத்து விஷாலும் தனது கோரிக்கையை தமிழக அரசுக்கும் போக்குவரத்து ஊழியர்களுக்கும் முன்வைத்துள்ளார். அவர் கூறியதாவது: அறிவிக்கப்படாத திடீர் போக்குவரத்து ஊழியர்கள் வேலைநிறுத்தத்தால் ஒட்டுமொத்த தமிழ்நாடே ஸ்தம்பித்து போயிருக்கிறது. இந்த வேலைநிறுத்ததால் பாமர மக்கள் தான் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர். விழாக்காலம் நெருங்கும் நேரத்தில் மக்களின் அவதி இன்னும் அதிகம் ஆகுமோ என்ற அச்சம் ஏற்படுகிறது
மக்கள் நலன் மீது அக்கறை கொண்டு தமிழக அரசு உடனே பேச்சுவார்த்தை நடத்தி போக்குவரத்து ஊழியர்களின் நியாயமான கோரிக்கைகளை ஏற்று வேலைநிறுத்தத்தை கைவிட செய்ய வேண்டும். இவ்வாறு விஷால் தெரிவித்துள்ளார்