விமர்சனம் எழுதும் பத்திரிகையாளர்களுக்கு விஷாலின் அன்பு வேண்டுகோள்

  • IndiaGlitz, [Monday,April 10 2017]

விக்ரம் பிரபு நடித்த 'நெருப்புடா' படத்தின் பாடல் வெளியீட்டு விழா சற்று முன்னர் சென்னையில் நடந்தது. இந்த விழாவிற்கு சுப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், இளையதிலகம் பிரபு, தயாரிப்பாளர் சங்க தலைவர் விஷால் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இந்த விழாவில் திரைப்படங்களுக்கு விமர்சனம் எழுதும் பத்திரிகையாளர்களுக்கு விஷால் ஒரு அன்பு வேண்டுகோள் விடுத்துள்ளார். 'ஒரு திரைப்படம் வெளிவந்தவுடன் தயவு செய்து மூன்று நாள் கழித்து நான்காவது நாள் விமர்சனம் செய்யும்படி அவர் கேட்டுக்கொண்டுள்ளார். ஜர்னலிசம் என்பது ஒரு செய்தியை மக்களுக்கு விரைவில் கொண்டு போய் சேர்க்கும் ஒரு முக்கிய கருவி என்பது உண்மையென்றாலும் ஒரு மனிதத்தன்மையுடன் நான் கேட்டுக்கொள்வது மூன்று தினங்களுக்கு பின் விமர்சனம் செய்ய வேண்டும் என்பதுதான்.

ஒருசில விமர்சகர்கள் தங்களுடைய சொந்த கருத்தை தமிழ்நாட்டு மக்களின் ஒட்டுமொத்த கருத்து போல ஒரு திரைப்படத்தின் விமர்சனத்தில் புகுத்துகின்றனர். அதுவும் முதல் காட்சி முடிந்தவுடனே இவ்வாறு விமர்சனம் எழுதுவதால் படத்தின் வசூல் பாதிக்கின்றது. எனவே ஒரு தயாரிப்பாளர் சங்க தலைவராக, ஒரு நடிகர் சங்கத்தின் பொதுச்செயலாளராக, ஒரு நடிகராக, ஒரு மனிதராக திரைப்படங்களின் விமர்சனத்தை நான்காவது நாள் வெளியிடுங்கள் என்று கேட்டுக்கொள்கிறேன்' என்று விஷால் கூறியுள்ளார்.