விஷாலின் வேலைநிறுத்த போராடத்திற்கு முழு ஒத்துழைப்பு கிடைக்குமா?
- IndiaGlitz, [Friday,May 12 2017]
நடிகர் சங்க செயலாளரும், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தலைவருமான விஷால் கடந்த சில தினங்களுக்கு முன்னர் மத்திய மாநில அரசுகளுக்கு வைத்த கோரிக்கை கவனிக்கப்படாமல் இருப்பதால் வரும் ஜூன் 1 முதல் திரையுலகினர்களின் ஒட்டுமொத்த வேலைநிறுத்தம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக இம்மாத இறுதி வாரத்தில் யாரும் திரைப்படங்களை ரிலீஸ் செய்ய வேண்டாம் என்று விஷால் கேட்டுக்கொண்டார். எனவே வரும் 19ஆம் தேதி வரும் வெள்ளியை அடுத்து திரைப்படங்கள் வெளிவராது என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், மே 26ஆம் தேதி சமுத்திரக்கனியின் 'தொண்டன்' மற்றும் அருள்நிதியின் 'பிருந்தாவனம்' ஆகிய படங்கள் வெளிவரவுள்ளது உறுதியாகியுள்ளது. மேலும் விஷாலின் வேலை நிறுத்தத்திற்கு திரையரங்கு உரிமையாளர்கள் ஒத்துழைப்பு தர மறுத்துவிட்டனர். கோடை விடுமுறையில் பொதுமக்களுக்கு இருக்கும் ஒரே பொழுதுபோக்கு புதியதாக வெளிவரும் திரைப்படங்களை பார்ப்பதுதான். இந்த நேரத்தில் திரையரங்குகளை மூட சொல்வது முட்டாள்தனம் என்று திரையரங்கு உரிமையாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
எனவே விஷாலின் வேலைநிறுத்த அறிவிப்புக்கு திரையுலகினர்களின் முழு ஆதரவு கிடைக்குமா? என்பது சந்தேகமே என்று கோலிவுட்டில் கூறப்பட்டு வருகிறது.